பங்குச்சந்தை, இணையவழி தொழில்கள் ஆன்லைன் வர்த்தகம், வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு, கிரிப்ட்டோ கரன்சி பெயரில் ஆள் சேர்த்து மோசடி என்று பல மோசடிகள் தினம் தினம் நடைபெற்றாலும் மக்களின் பேராசையால், மோசடி பேர்வழிகள் தினம் தினம் முளைத்தவரே உள்ளனர்.
அவ்வாறு ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஏமாற்றப்பட்ட ஒருவர் எவ்வாறு மோசடி நடைபெற்றது என்பதை விளக்கும் கட்டுரையாக இதை காணலாம்.
பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டவர்கள், சமூக ஊடக விளம்பரத்தின் மூலம் ஒரு போலியான நிறுவனத்தின் முதலீட்டு திட்டத்துக்கு இழுக்கப்படுகின்றனர். விளம்பரத்தின் மூலம் வந்த இணைப்பில் சேர்ந்த உடன், ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் சேர்க்கப்படுகின்றனர். அங்கே முதலீட்டு பயிற்சிகள், வீடியோக்கள் வழங்கப்படுவதோடு, சில பொறுப்புகள் அவர்களுக்கு என வழங்கப்பட்டு, அவர்கள் நிறுவனத்தின் ஒரு நிர்வாகியென நம்ப வைக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட கால அளவில் அனைத்து நிர்வாகிகளும் முதலீடு செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்.
700% Wealth Leap திட்டம்:
முதலீட்டாளர்களை ஏமாற்றும் மோசடி!
பிறகு ஒரு மொபைல் செயலியை (பிரைவேட் ஆப்) பதிவிறக்கம் செய்து, முதலில் ஒரு குறைந்த முதலீடு செய்யத் தூண்டப்படுகின்றனர். அந்த செயலி மூலம், நம்மால் செய்யப்பட்ட முதலீட்டு விவரங்களும் வருமானங்களும் போலியாக ஒவ்வொரு நாளும் அதிக லாபம் பெறுவதாக காட்டப்படுகின்றது.
இதனால் இந்த குழுவில் உள்ள அனைவருக்கும், அந்த நிறுவனம் மீது நம்பிக்கையும், நேர்மறையான எண்ணமும் உருவாகின்றது.
முதலில் குறைந்த முதலீடு செய்வதற்கு தூண்டப்பட்டு, நல்ல இலாபங்களைப் பெறுமாறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, பின்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு பெரிய தொகைகளுக்கு மோசடியாளர்களால் குறிவைக்கப்படுகிறது.
பிறகு இது போன்ற நிறுவனங்கள், அதிக இலாபம் தரும் என்று பொய்யான உறுதியளித்து, தனது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இதில் 700% இலாபம், அதற்கு 20% கமிஷன் என்ற வகையில் கூறப்படுகிறது . இதை நம்பி அவர்கள் அனுப்பும் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து பணம் அனுப்பத் தொடங்குகின்றனர். தனது கணக்கில் பணம் வரம்பு மீறியது என்று கூறி, பல வங்கி கணக்குகளில் பணம் அனுப்புமாறு கேட்டுப் பெறுகின்றனர்.
தொடக்கத்தில், வருவாய்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றன. UC மற்றும் Block Trade வாய்ப்புகளில் நல்ல இலாபம் காணப்படுகின்றது. RNFI Services நிறுவனம் IPO வெளியிட்டபோது, முதலீட்டாளர்கள் வெறும் 5 நாட்களில் 100% இலாபம் ஈட்டுகின்றனர். ஒருங்கிணைப்பாளர், பங்குகளை விற்பதற்கு தேவையான அடுத்த அறிவிப்பிற்கு காத்திருக்கும்படி அனைவரையும் ஊக்குவிக்கின்றார்.
அதே நேரத்தில், “50% கேஷ்பேக்” வசதியுடன் Block Trading செய்வதற்கு மக்களைத் தூண்டுகின்றார், இதனால் முதலீட்டாளர்கள் மிகப் பெரிய இலாபம் பெறுவதாக நம்புகின்றனர். இதன் மூலம் முதலீட்டாளர்கள் 700% வருவாய் பெறுவதாகவும் தவறாக உணர்த்தப்படுகின்றது.
இறுதியில், வாக்களிக்கப்பட்ட 700% இலாபம் காணப்பட்டபோது, தினமும் செய்திகளை அனுப்பிவந்த மோசடி நபர் இலாபத்தை வங்கிக் கணக்கில் செலுத்த 20% கமிஷனை முன்கூட்டியே செலுத்த வேண்டுமென்று வலியுறுத்துகின்றார்.
சாதாரணமாக கமிஷன் இலாபத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டியது என்றாலும், இங்கு கமிஷனை முன்கூட்டியே கேட்பது ஒரு அசாதாரண செயல். பணம் செலுத்த மறுத்தவர்களை உடனடியாக குற்றம் சாட்டியும், தடை செய்து, திட்டத்திலிருந்து நீக்கியும் விடுகின்றனர். கமிஷனை செலுத்தியவர்களும் பின்னர் முற்றிலும் தொடர்பு இழந்துவிடுகின்றனர்.
ஒரு நாள் திடீரென வாட்ஸ்ஆப் குழு முடங்கிவிடுகின்றது. ஆப் செயலிழந்துவிடுகின்றது. எந்த தொடர்பு விவரங்களும் இல்லை. அனைவரும் உணர்கின்றனர்; இது ஒரு பெரிய டிஜிட்டல் வர்த்தக மோசடி!
தொடக்கத்திலிருந்தே, குழுவில் சிலர் “இன்ஃப்ளூயன்சர்கள்” போல நடித்து, கடன் பெற்று முதலீடு செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கை மாற்றம் அடைந்ததையும், நிதிநெருக்கடிகள் தீர்ந்ததையும் கூறிக்கொண்டிருந்தனர். இது மற்றவர்களை அதிகம் முதலீடு செய்யத் தூண்டும் உத்தியாக இருந்தது, இதன் முடிவாக பலரையும் மோசடிக்குள்ளாக்கியது.
குழு காணாமல் போனபிறகு, தங்களை விட அதிகம் முதலீடு செய்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர். அப்போது தான் தங்களைத் தவிர மற்ற 99 எண்ணும் போலியானவை என்பதை உணர்கின்றனர்.
இறுதியில், அந்தக் குழு காணாமல் போனபோது, இது ஒரு நுணுக்கமாக திட்டமிடப்பட்ட “டிஜிட்டல் வர்த்தக மோசடி” என்பதை அனைவரும் உணர்கின்றனர். இந்த மோசடியால் எண்ணற்ற மக்கள் பெரும் நிதி நஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். இறுதியாக, பெரிய தொகை கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் தற்கொலைக்கும் முயல்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை, நான் எனது அனுபவத்தில் கற்றது,
1.அறிமுகம் இல்லாத முதலீட்டு வாய்ப்புகளை தவிர்க்கவும்.
2.தெரியாத நிறுவனங்கள் வழங்கும் வாட்ஸ்ஆப் வர்த்தகக் குழுக்களில் சேர்வதற்கு முன்பு கவனிக்கவும்.
3.முதலீடு செய்வதற்கு முன்பு நிறுவனத்தின் பின்னணி, அனுமதி, வர்த்தக வரலாற்றை ஆராயுங்கள்.
4.எதிலும் கடன் வாங்கி முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
5.பதிவு செய்யப்பட்ட டிமாட் கணக்கின் வழியே மட்டும் வர்த்தகம் செய்யுங்கள்.
6.தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் அல்லது அனுமதி நிறுவன வங்கிக் கணக்குகள் மூலம் வர்த்தகம் செய்யாதீர்கள்.
இணையத்தில் பொய்யான வர்த்தக வாய்ப்புகள் பல உருவாகின்றன. விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். முழுமையாக ஆராய்ச்சி செய்து, நம்பிக்கைக்குரிய தளங்களை மட்டுமே தேர்வுசெய்யுங்கள்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
