கோவையில் தனித்திறன் பயிற்றுனர்கள் சந்திப்பு :2.0!

நமது வணிகம் ஊடகம் மற்றும் கூட்டமைப்பு (COTE) – NVMA ஏற்பாடு செய்திருந்த தனித்திறன் பயிற்றுனர்களுக்கான  ஒரு நாள் சந்திப்பு, 10.08.2025 – ஞாயிறு அன்று கோவையில் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட தனித் திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தற்கால சமுதாயம், தொழில்நுட்பம், பயிற்சியாளர்களுக்கு தேவையான அடிப்படை திறன்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் முறை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட, பன்னாட்டு பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர் முனைவர். ஆர்த்தி அவர்களும், சமூக வலைதளத்தில் பிரபலமாக இயங்கி வரும் திரு. ஹுசைன் அஹமத் அவர்களும் சிறப்புரையாற்றி  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மதிய சிறப்பு உணவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்ட அனைத்து பயிற்றுனர்களும் தங்களுக்குள்ளாக தொடர்புகளையும், நாளைய தலைமுறையின்  எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பயிற்சி முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பாக பங்குபெற்று, கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய பயிற்றுனர்களுக்கு “சிறப்பு விருதுகள்” வழங்கி பாராட்டப்பட்டது. 

முக்கிய 30 ற்கும் மேற்பட்ட தனித்திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அமைப்பின் நிறுவனர் திரு. எம்.எம்.பிரபு அவர்களால் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய தீர்மானங்கள், அனைத்து பங்கேற்பாளர்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில் “மாறிவரும் கால சூழ்நிலைகளுக்கேற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், மாணவர்கள், தொழில் முனைவோர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து மனித மனங்களின் மாற்றங்களை புரிந்து கொண்டும், சமூகத்திற்கு ஏற்ற பயிற்சிகளை அடையாளம்கண்டு நேர்மறையான வழியில் வழங்குவது என்பது சவாலான ஒன்று. அது ஒவ்வொரு பயிற்சியாளர்களின் திறனைப் பொறுத்தது. இருப்பினும் அவற்றை இன்னும் எளிதாக புரிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பயிற்சியாளர்கள் இன்னும் தங்களை மெருகேற்றிக்கொள்ள இது போன்றதொரு பயிற்சியாளர்களுக்கென  தனிப்பட்ட ஒன்றுகூடல் சந்திப்பு ஒவ்வொரு வருடமும், மிகவும் அவசியமான ஒன்று.

முதலாம் ஆண்டில் 10 பயிற்சியாளர்கள் வரை கலந்து கொண்ட நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது. இந்த ஆண்டில் 30க்கும் மேற்பட்ட தொழில்முறை பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுவே இந்நிகழ்வின் மாபெரும் வெற்றி. இந்த நிகழ்வு இனி வரும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் நடைபெற உள்ளது.

பயிற்றுனர்களுக்கு  இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது மூலம், தெளிவான, உலகமயமாக்கப்பட்ட தனித்திறன் மற்றும் தொழில் பயிற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதே இந்நிகழ்வில் நோக்கம்“.” என்று தெரிவித்தார்.

கலந்து கொண்ட அனைத்து தனித்திறன் பயிற்றுனர்களுக்கும், நிகழ்வின் முடிவில் “Trainers Endorsement” சான்றிதழ் வழங்கப்பட்டு, நமது வணிகம் கூட்டமைப்பின் தலைவர் திரு. சி. மணி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு, நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.