பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மேலும் 4 புதிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இப்போது வரை அனுமதிக்கப்பட்ட 6 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்க, இந்த 4 புதிய அனுமதிகளால் இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முன்னேற்ற வேகம் அதிகரித்து வருகிறது. அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் — SiCSem, Continental Device India Private Limited (CDIL), 3D Glass Solutions Inc., மற்றும் Advanced System in Package (ASIP) Technologies.
இந்த 4 திட்டங்களும் சேர்ந்து சுமார் ரூ.4,600 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி நிலையங்களை அமைக்கவுள்ளன. இதனால் 2,034 திறமையான நிபுணர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் எனவும், பல்வேறு மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகி, மின்சாதன உற்பத்தி சூழலுக்கே ஊக்கமளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 திட்டங்களும் சேர்ந்து, நாட்டின் 6 மாநிலங்களில் ISM கீழ் அனுமதி பெற்ற மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆகும். மொத்த முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.1.60 லட்சம் கோடி.
டெலிகாம், வாகன உற்பத்தி, டேட்டா சென்டர், நுகர்வோர் மின்சாதனங்கள், தொழிற்துறை மின்சாதனங்கள் போன்ற துறைகளில் செமிகொண்டக்டர் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த 4 புதிய திட்டங்களும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ குறிக்கோளுக்கு பெரிய பங்களிப்பாக இருக்கும்.
SiCSem மற்றும் 3D Glass நிறுவனங்கள் ஒடிசாவின் இன்போ வாலி பகுதியில் அமைக்கப்படவுள்ளன. CDIL பஞ்சாபில், ASIP ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது.
SiCSem Private Limited — யுகே-யின் Clas-SiC Wafer Fab Ltd. நிறுவனத்துடன் இணைந்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், இன்போ வாலியில் நாட்டின் முதல் வணிக ரீதியான ‘காம்பவுண்ட் செமிகண்டக்டர்’ உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இங்கு ஆண்டுக்கு 60,000 சிலிகான் கார்பைடு வேஃபர்கள் மற்றும் 96 மில்லியன் யூனிட்கள் பேக்கேஜிங் செய்யும் திறன் இருக்கும். உற்பத்தியாகும் பொருட்கள் ஏவுகணைகள், பாதுகாப்பு உபகரணங்கள், மின்சார வாகனங்கள், ரயில்கள், அதிவேக சார்ஜர்கள், டேட்டா சென்டர் ரேக்குகள், வீட்டு உபகரணங்கள், சோலார் பவர் இன்வெர்டர்கள் போன்றவற்றில் பயன்படும்.
3D Glass Solutions Inc. (3DGS) — ஒடிசா, இன்போ வாலியில் ‘அட்வான்ஸ்ட் பேக்கேஜிங்’ மற்றும் ‘எம்பெடெட் கிளாஸ் சப்ஸ்ட்ரேட்’ உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இது உலகின் மிக முன்னேற்றமான பேக்கேஜிங் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும். ஆண்டுக்கு சுமார் 69,600 கிளாஸ் பேனல் சப்ஸ்ட்ரேட்கள், 50 மில்லியன் அசெம்பிள் செய்யப்பட்ட யூனிட்கள், மற்றும் 13,200 3DHI மாட்யூல்கள் தயாரிக்கும் திறன் கொண்டது. தயாரிப்புகள் பாதுகாப்பு, உயர் செயல்திறன் கணினி, செயற்கை நுண்ணறிவு, வானொலி அலைவீச்சு மற்றும் வாகன உற்பத்தி, ஒளியியல் மற்றும் இணைந்த ஆப்டிக்ஸ் துறைகளில் பயன்படும்.
Advanced System in Package Technologies (ASIP) — ஆந்திரப் பிரதேசத்தில் APACT Co. Ltd. (தென் கொரியா) நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு 96 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி திறனுடன் செமிகண்டக்டர் உற்பத்தி நிலையம் அமைக்கிறது. தயாரிப்புகள் மொபைல் போன்கள், செட்-டாப் பாக்ஸ்கள், வாகன பயன்பாடுகள் மற்றும் பிற மின்சாதனங்களில் பயன்படும்.
Continental Device India Limited (CDIL) — பஞ்சாப், மோகாலியில் உள்ள தற்போதைய உற்பத்தி நிலையத்தை விரிவாக்கி, அதிக சக்தி கொண்ட MOSFETs, IGBTs, Schottky Bypass Diodes, மற்றும் டிரான்சிஸ்டர்கள் (சிலிகான் மற்றும் சிலிகான் கார்பைடு) உற்பத்தி செய்ய உள்ளது. ஆண்டுக்கு சுமார் 158.38 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் இருக்கும். தயாரிப்புகள் மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் வசதிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள், மின் மாற்று பயன்பாடுகள், தொழிற்துறை உபயோகங்கள் மற்றும் தொடர்பு கட்டமைப்புகளில் பயன்படும்.
இந்த திட்டங்கள் நாட்டின் செமிகண்டக்டர் துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். இதில் நாட்டின் முதல் வணிக ரீதியான காம்பவுண்ட் ஃபேப் மற்றும் மிக முன்னேற்றமான கண்ணாடி அடிப்படையிலான சப்ஸ்ட்ரேட் பேக்கேஜிங் யூனிட்டும் அடங்கும்.
அதே நேரத்தில், அரசு வழங்கிய டிசைன் உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் தற்போது 278 கல்வி நிறுவனங்கள் மற்றும் 72 ஸ்டார்ட்அப்புகள் நாட்டில் உலகத் தரத்திலான சிப் வடிவமைப்பு திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘டாலண்ட் டெவலப்மெண்ட்’ திட்டத்தின் பயன்களை பெற்றுள்ளனர்.
செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் புதிய கட்டம்: Cabinet ஒப்புதலுடன் ₹4,600 கோடி முதலீடு, 2,034 வேலை வாய்ப்பு
