இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும்.
அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன.
சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலோ, இந்தியாவின் தொழில்நுட்ப அடிப்படை, முற்றிலும் பாதிக்கப்படும்.
சமூக ஊடக பிளாட்பாரங்கள் மூலம் பொதுமக்களின் கருத்து, தகவல் பரிமாற்றம் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயகத்திற்கே ஒரு சவால்.
அரசு தரவுகளை உள்ளூரில் சேமிக்க சொவர்இன் கிளவுட் அமைப்பது தற்போது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தேசிய இயக்க முறைமை உருவாக்கி, பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்துதல், சைபர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தரவு பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்துதல் போன்றவையும் தற்போது தேவையான ஒன்றாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.