இந்தியாவின் சிறு நகரங்களை வான்வழியாக இணைக்கவும், நடுத்தர வர்க்க மக்களும் விமானத்தில் பயணிக்கவும் கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு உதான் (UDAN) திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல விமான நிலையங்கள் தற்போது போதிய வருமானமின்றி முடங்கிக்கிடப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விமான நிலையங்களில் சுமார் 15 விமான நிலையங்கள் தற்போது எவ்வித விமானப் போக்குவரத்தும் இன்றி முடங்கியுள்ளன. இருப்பினும், இந்த விமான நிலையங்களைச் சீராகப் பராமரிக்க மட்டும் மத்திய அரசு இதுவரை ரூ.900 கோடி செலவிட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை குறைவு மற்றும் விலை உயர்வு
தொடக்கத்தில் அரசு வழங்கிய 3 ஆண்டு கால மானியம் முடிந்தவுடன், டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் உயர்த்தின. இதனால் நடுத்தர மக்கள் மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் போதிய பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக, விமானங்களை இயக்குவதில் நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு விமானம் லாபகரமாக இயங்கக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகள் தேவைப்படும் நிலையில், சிறிய நகரங்களில் அந்த இலக்கை எட்ட முடிவதில்லை. இதனால் விமான நிறுவனங்கள் இத்தகைய வழித்தடங்களில் சேவையைத் தொடரத் தயக்கம் காட்டுகின்றன.
வானிலை சிக்கல்கள் மற்றும் உள்கட்டமைப்பு சவால்கள்
வட மாநிலங்களில் அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களை இயக்குவதில் பெரும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் விமான போக்குவரத்து என்பது வானிலையைச் சார்ந்தே இருப்பதால், சீரற்ற சேவைகள் காரணமாகப் பயணிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். 2024-ஆம் ஆண்டில் மட்டும் அரசு உதான் திட்டத்தில் திறந்த 7 விமான நிலையங்கள் தற்போது செயல்படாமல் உள்ளன. இதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள 5 விமான நிலையங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானங்களே வராத ஏர்போர்ட்களுக்கு ரூ.900 கோடி செலவு! உதான் (UDAN) திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?


