இன்றைய உலகில் எல்லாமே கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மயமாகிவிட்டது. இதனால், படிப்பு முடிந்தவுடன் வேலை பெற, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (CSE) படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரவலாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. பெரிய டெக் நிறுவனங்கள் தற்போது CSE படித்தவர்களுக்கு மாற்றாக வேறொரு பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. பாரம்பரியமாக டெக் நிறுவனங்கள் CSE படித்தவர்களுக்கே முன்னுரிமை அளித்து வந்த நிலைமை தற்போது மாறி, புதிய திறன்கொண்டவர்களைத் தேடத் தொடங்கியுள்ளன.
ECE-க்கு முன்னுரிமை அளிக்கக் காரணம் என்ன?
டெக் நிறுவனங்களுக்கு வெறும் கோடிங் செய்யத் தெரிந்த இன்ஜினியர்கள் மட்டும் தேவை இல்லை. அவர்களுக்கு ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆகிய மூன்று குறித்த புரிதல்களையும் கொண்ட திறன்மிகு நபர்கள் தேவைப்படுகின்றனர். உலக அளவில் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி, ஐஓடி (IoT), ஏஐ (AI), ரோபோடிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் போன்ற துறைகள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு வெறும் சாஃப்ட்வேர் மட்டும் காரணமில்லை. சிப் வடிவமைப்பு (Chip Design), சர்க்யூட், நெட்வொர்க் சிஸ்டம் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆகியவற்றின் புரிதலும் அவசியமாகிறது. இந்தத் திறன்கள் அனைத்தும் Electronics and Communication Engineering (ECE) பட்டப் படிப்பில் உள்ளதால், தற்போது டெக் நிறுவனங்கள் ECE பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன.
பிளேஸ்மென்டில் ECE மாணவர்கள் முன்னிலை
ஜாம்செட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில், CSE படித்தவர்களுக்கு இணையாக B.Tech ECE முடித்த 82 மாணவர்களுக்கு ₹82 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ECE பிரிவில் படித்தவர்களுக்கு 100% பிளேஸ்மென்ட் கிடைத்திருக்கிறது என்றும், இன்டர்ன்ஷிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் CSE மாணவர்களை விட ECE மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, டெக் நிறுவனங்களுக்கு தற்போது வெறும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் மட்டும் தேவையில்லை, ஹார்ட்வேர் குறித்த புரிதலும் கொண்டவர்களே தேவைப்படுகிறார்கள். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய படிப்பாக ECE இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கம்பியூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? டெக் நிறுவனங்களின் புதுத் தேர்வு!


