GST 2.0 – வருகிறதா இரண்டு கட்ட வரி அமைப்பு?


இந்தியாவின் GST வரிவிகித அமைப்பில் பெரும் மாற்றம் வரவிருக்கிறது.  இரண்டு கட்ட வரி அமைப்பிற்கான (two-slab structure)  பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய 5%, 12%, 18% மற்றும் 28% எனும் நான்கு படிகள் சுருக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு கட்ட வரிகளாக மாற்றப்பட உள்ளது. இதனுடன், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘Sin goods’ என அழைக்கப்படும் பொருட்களுக்கு 40% தனித்த வரி விகிதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

• பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் மற்றும் சேவைகள் 5% வரியில் அடங்கும்.

• அதேசமயம், பெரும்பாலான வழக்கமான பொருட்கள் மற்றும் சேவைகள் 18% வரிக்குள் கொண்டு வரப்படும்.

• உயர்நிலை ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு அதிகப்படியான 40% வரி விதிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் வரிசமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த பொருளாதார நடைமுறைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த மாற்றம் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் என்ற கவலை அரசாங்கத்தில் நிலவுகிறது. இதனை சமாளிப்பதற்காக GST கவுன்சிலில் விரிவான ஆலோசனைகள் நடைபெறவிருக்கின்றன. கவுன்சிலின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இருந்தாலும், இந்த சீர்திருத்தம் குறுகிய காலத்திலேயே செயல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மொத்தத்தில், இந்த மாற்றம் பொதுமக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வரிச்சுமையை குறைக்கும் வகையில் அமையும். மேலும், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை காப்பீடு போன்ற துறைகளை GST விலையிலிருந்து விலக்கச் செய்யும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால், “GST 2.0” எனப்படும் புதிய சீர்திருத்தம் இந்தியாவின் வரி அமைப்பை மேலும் எளிமையாக்கி, வணிகச் சூழலை சீர்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.