கனடா, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு, அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளதால், அமெரிக்காவின் மின் சாதனங்கள் வேளாண் மற்றும் ஜவுளி பொருட்களின் இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
2025 மே மாதத்தில் அமெரிக்காவின் மின்னணு பொருட்கள் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரம், சீனாவின் பங்கு 22 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. மின்னணு துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் சோலார் பேனல்கள் முக்கிய காரணங்களாக உள்ளன.
2025 – 26 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்காவுக்கு இந்திய மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் உயர்ந்து 1,241 கோடி டாலராக உள்ளது. கடந்த மே மாதத்தில், அமெரிக்காவின் ஜவுளி இறக்குமதியில் சீனாவின் பங்கு 27 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் பங்கு 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், வியட்நாமின் பங்கு 14 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
மேலும், மே மாதத்தில் அமெரிக்காவின் வேளாண் மற்றும் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில், சீனாவின் பங்கு 3.5 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் பங்கு 1.7 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கான வேளாண் ஏற்றுமதியில் சீனாவின் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.
2025 – 26 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியா, மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் நேர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. அதே நேரம், ஜி 20 நாடுகளில் அமெரிக்காவுக்கு சீனாவின் ஏற்றுமதி ஐந்து சதவீதம் குறைந்து, மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்த நாட்டை தொடர்ந்து, கனடாவும் பல நாடுகளும் அமெரிக்காவுக்கான இறக்குமதியில் சரிவை கண்டுள்ளன.
சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் 55 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இந்தியாவின் பிற பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி, இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 50 சதவீதம், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
மருந்து பொருள்களுக்கு வரி மாற்றப்படாததால், அமெரிக்கச் சந்தையில் இந்தியா தனது பங்கை தக்க வைத்துள்ளது. குறிப்பாக, பொதுவான மருந்துகள் இறக்குமதியில் 40 சதவீத பங்கு வகிக்கிறது. மருந்து பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இருந்தாலும், இந்திய மருந்து பொருட்களின் விலைகள், போட்டியாளர்களை விட 30 முதல் 80 சதவீதம் மலிவாக இருப்பதால், இந்தியா இந்தப் பிரிவில் தனது இருப்பை, தொடர்ந்து தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.