உலகின் அதிவேக இணைய சாதனை – ஜப்பானின் புதிய தொழில்நுட்ப  வரலாறு!

ஜப்பான், இணைய வேகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஜப்பானின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (NICT) உலகின் மிக வேகமான இணையத்தை உருவாக்கி பெரும் சாதனையை செய்துள்ளது. இது 1.02 பெடாபிட்ஸ் (1,02,000 டெராபிட்ஸ்) வீதம் ஒன்றே ஒரு விநாடியில் தரவுகளை அனுப்ப முடியும் என்பதை நிரூபிக்கிறது. இது இந்தியாவின் சராசரி இணைய வேகத்தைக் காட்டிலும் 16 மில்லியன் மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சாதனை, 0.125 மிமீ அளவுடைய நார் கேபிளின் 19 ஒளிக்கோர்களை பயன்படுத்தி, 1,800 கிமீ தொலைவில் தரவை மிகவேகமாக அனுப்பி நிகழ்த்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட நார், தற்போதுள்ள நெட்வொர்க் உபகரணங்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதால், இந்த வளர்ச்சி உலகளாவிய 6G, AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கக் கூடியதாகும்.

தொழில் மற்றும் தொழில்நுட்ப உலகுக்கு புதிய வாயில்கள்
இதன் மூலம் Netflix, YouTube, Wikipedia போன்ற தளங்களை கண் இமைக்கும் வேகத்தில் அணுக முடியும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான 8K வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய அளவுக்கு இதன் தரவுப் பரிமாற்ற திறன் உள்ளது. இணையத்தில் காணப்படும் தாமதம் குறைந்து, தொழில்துறை, கல்வி, மருத்துவம் போன்ற பல துறைகளிலும் இது புரட்சியை நிகழ்த்தும்.

இணைய வேகத்தில் ஜப்பான் தற்போது உலகத்தின் தலைசிறந்த நாடாக   உருவெடுத்திருக்க, இந்தியாவின் சராசரி இணைய வேகம் 63.5 Mbps ஆக உள்ளது. இது இன்றைய தொழில்நுட்பப் போட்டியில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை உணர்த்துகிறது. எனவே 6G, உயர் வேக இணையம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் மேலும்  முதலீடு அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“இந்த சாதனை இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக அமைய வேண்டும். உலக தரத்தில் இணைய வசதியை வழங்கும் நோக்கில், நம் நாட்டு நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் முன்னேற வேண்டும். இது மட்டும் அல்லாமல், இந்த சாதனையை அடைவதற்கான நடவடிக்கைகள் கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நம்மை உலகளவில் முன்னணிக்கு கொண்டு செல்லும் முக்கிய படியாக அமையும்.” இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

#DigitalFuture #JapanInternetSpeed #TechnologyNewsTamil #BusinessMagazinePost #InternetRevolution