இந்தியாவின் பொருளாதார வலிமையை உயர்த்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களுக்கு இடமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நம் நாட்டில் விவசாயிகள் உழைக்கிறார்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்கின்றன, அத்தகைய உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” என்று மோடி குறிப்பிட்டார்.
மேலும், உள்நாட்டு பொருட்களை முன்னுரிமை செய்வதால் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் உற்பத்தி துறை, வேலைவாய்ப்புகள், மற்றும் நாட்டின் பொருளாதார சுயமரியாதை ஆகியவை பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வியாபாரிகளின் பங்கு இவ்விடயத்தில் மிக முக்கியமானது என்பதால், இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“Make in India” முயற்சிக்கு இது ஒரு புதிய திசையையும், நுகர்வோரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பொருட்களை விலக்கி, உள்நாட்டு பொருட்களை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கை வர்த்தக துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.