Google Chrome-ஐ வாங்க 34.5 பில்லியன் டாலர் சலுகை வைத்த Perplexity AI!

அமெரிக்காவில் இயங்கும் Perplexity AI என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப், Google Chrome – ஐ வாங்குவதற்காக 34.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிரடி சலுகையை வழங்கியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்த சலுகை அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் Google-க்கு எதிராக நடைபெற்று வரும் அன்ட்டி-டிரஸ்ட் வழக்கு முடிவில், Chrome-ஐ பிரித்து விற்க வேண்டிய நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த சலுகை வந்துள்ளது.

Perplexity தனது சலுகையில் Chromium எனப்படும் Chrome-ன் ஓப்பன்-சோர்ஸ் அடிப்படை பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்றும், பயனர்களின் தற்போதைய அனுபவத்தில் மாற்றமில்லை என்றும், கூகுளை இயல்புநிலை தேடுபொறியாகவே தொடரலாம் என்றும் உறுதி அளித்துள்ளது. மேலும், Chrome வளர்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்றும், வாங்கிய பிறகு குறைந்தது 100 மாதங்கள் பயனர்களுக்கு ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

SoftBank, Nvidia, Jeff Bezos போன்ற பிரபல முதலீட்டாளர்கள் Perplexity-க்கு ஆதரவாக உள்ளனர். 2022-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2025 நடுப்பகுதியில் சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இருந்தது. Chromium அடிப்படையில் Comet என்ற AI உலாவியை வெளியிட்டிருந்தாலும், அது இன்னும் குறுகிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் பல நிபுணர்கள் இந்த சலுகையை செயல்படக்கூடிய வணிக முயற்சி அல்ல, மாறாக ஒரு மார்க்கெட்டிங் நடவடிக்கை அல்லது கவன ஈர்ப்பு முயற்சி என கருதுகின்றனர். Chrome-க்கு தற்போது 3 பில்லியன் பயனர்கள் இருப்பதால், அதன் உண்மையான மதிப்பு 34.5 பில்லியனைக் காட்டிலும் மிக அதிகம் இருக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா விரைவில் தீர்ப்பு வழங்கலாம், ஆனால் Chrome விற்பனைக்கு கட்டாயப்படுத்தப்பட்டாலும், அது நடைமுறையில் நிறைவேற பல ஆண்டுகள் எடுக்கும் என கணிக்கப்படுகிறது.