தண்டவாளங்களில் சூரிய ஆற்றல் உற்பத்தி: சுவிட்சர்லாந்தின் பசுமை பயணம்!

சுவிட்சர்லாந்து, இயற்கையை பாதிக்காமல் வளர்ச்சி பெறும் புதிய பாதையில் எடுத்து வைத்துள்ள ஒரு புதிய முயற்சி, உலகளவில் கவனம் ஈர்க்கிறது. அந்த நாட்டின் Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், ரயில்கள் ஓடும் தண்டவாளங்களைவே சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

இந்த திட்டத்தின் முக்கியமான அம்சம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக பொருத்தக்கூடிய சோலார் பேனல்கள். இவை ரயில்கள் ஓடுவதில் எந்தவித தடையையும் ஏற்படுத்தாமல் செயல்படுகின்றன. ரயில்களின் அதிர்வுகள், அதிக வெப்பம் மற்றும் நிலைக்கும் அழுத்தங்களை தாங்கக்கூடிய வலுவான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான ரயில்பாதை பராமரிப்பு முறைகளிலும் இவை இடையூறு ஏற்படுத்தாது.

தரமான சூரிய உற்பத்திக்கு இது சிறந்த வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோமீட்டர் தண்டவாளத்தில் அமைக்கப்படும் சோலார் பேனல்கள், சுமார் பல வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. சுவிட்சர்லாந்தில் 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தண்டவாளங்கள் உள்ள நிலையில், இது தேசிய அளவில் பசுமை மின்சக்தியை பெருக்கக் கூடிய மாபெரும் திட்டமாகக் கருதப்படுகிறது.

Sun-Ways நிறுவனம் இதற்காக Federal Institute of Technology Lausanne (EPFL) உடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தற்போது சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், உலகின் பிற நாடுகளுக்கும் ஒரு பசுமையான மாடல் திட்டமாக அமைந்து, சுற்றுச்சூழலுக்கு இடையூறில்லாமல் சுயநிறைவு மின்சாரத்துக்கான புதிய பாதையை உருவாக்கும்.