அமெரிக்க வரியினால்  பெப்சி, கோகோலா, கேஎஃப்சி புறக்கணிப்பு!


அமெரிக்கா இந்திய தயாரிப்புகளுக்கு அதிக சதவீதம் வரி விதித்த பின்னணியில், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பு குரல் அதிகரித்துள்ளது. யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நேரடியாக மக்களிடம் அழைப்பு விடுத்து, “ஒரு இந்தியரும் பெப்சி, கோகோலா, கேஎஃப்சி, மக்டொனால்ட்ஸ் அல்லது சப்வே கவுண்டர்களில் இருக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

இந்த அழைப்பு, பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் “வோக்கல் ஃபார் லொக்கல்” இயக்கத்துடன் இணைந்து “ஸ்வதேசி 2.0” என்ற புதிய தேசிய உணர்வை தூண்டுகிறது. இதன் தாக்கமாக, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அமெரிக்க பானங்கள் மற்றும் உணவு பொருட்களைத் தடை செய்வதற்கான முடிவுகளை எடுத்து வருகின்றன.

உதாரணமாக, பஞ்சாபில் உள்ள ஒரு பெரிய தனியார் பல்கலைக்கழகத்தில், அமெரிக்க பானங்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே “இந்திய தயாரிப்புகளை இந்தியர்களாகிய நாம் முன்னேற்றுவோம்” என்ற சிந்தனையை தூண்டியுள்ளது.