மத்திய அரசு நவம்பர் 21, 2025 முதல்அமல்படுத்திய புதிய தொழிலாளர் விதிகளின் (New Labour Codes) கீழ், கிராஜுவிட்டி (Gratuity) எனப்படும் பணிக்கொடை பலனை பெறுவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முக்கிய விதி மாற்றம்
பழைய விதி:இதற்கு முன்பு, ஓர் ஊழியர் நிரந்தர ஊழியராக ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினால் மட்டுமே கிராஜுவிட்டி பெற முடியும் என்ற நிபந்தனை இருந்தது.
புதிய விதி: புதிய விதிகளின்படி, தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் (Fixed-Term Employees) மற்றும் சில வகை ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஓர் ஆண்டு மட்டுமே பணியாற்றியிருந்தாலும் கிராஜுவிட்டி பெற தகுதி பெறுவார்கள்.
நிரந்தர ஊழியர்களுக்கு: நிரந்தர ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஐந்து ஆண்டு தொடர்ச்சி பணி என்ற நிபந்தனை மாற்றமின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்தின் தாக்கம்
மத்திய அரசு கொண்டு வந்த இந்த மாற்றம், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களாக மாற்றியதன் ஒரு பகுதியாகும்.
இந்தச் சீர்திருத்தங்கள் ஐடி/ஐடிஇஎஸ், உற்பத்தித் துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கிக் (Gig) மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள், ஜவுளித் துறை உள்ளிட்ட பல துறைகளுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் ஏன் முக்கியம் என்றால், ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ மட்டுமே இருக்கும் தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் (Fixed-Term Employees) மற்றும் சில வகை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான நீண்டகாலப் பலனும் கிடைக்காமல் இருந்தது. இந்த மாற்றத்தால், அவர்கள் அதிக நிதி உதவி, ஓய்வுக் காலப் பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் பெற முடியும்.
ஊதியம் மற்றும் பிற நலன்கள்
புதிய விதிகளின்படி, தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் இனிமேல் நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.
சம ஊதியம்: நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அளவு ஊதியத்தை (Pro-rata basis) ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று புதிய விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.
பிற நலன்கள்:விடுமுறை, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு, போனஸ் உள்ளிட்ட நலன்களும் ஒப்பந்த காலத்துக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.
இந்த மாற்றங்கள் தொழிலாளர் நலனை மேம்படுத்தி, வேலை மாற்றம் செய்பவர்களுக்குப் பெரிய பாதுகாப்பை அளிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிராஜுவிட்டி கணக்கீட்டில் மாற்றம் இல்லை
கிராஜுவிட்டி தொகையைக் கணக்கிடும் ஃபார்மூலாவில் (Formula) எந்த மாற்றமும் இல்லை.
ஓர் ஊழியரின் பணிக்காலம் முடிந்த ஒவ்வொரு ஆண்டு பணிக்கும் கடைசியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் 15 நாட்கள் ஊதியம் என்ற விகிதத்தில் கிராஜுவிட்டி தொகை வழங்கப்படும்.
கிராஜுவிட்டி விதியில் மாபெரும் மாற்றம்: இனி 5 அல்ல, தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் 1 வருடம் வேலை செய்தால் போதும்!


