தமிழக மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000? பெண்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000..!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வரவிருக்கும் தை மாதம் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரொக்கப் பணம் வழங்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முறை ரொக்கம் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை எவ்வளவு?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022 பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023 மற்றும் 2024 பொங்கல் பண்டிகைகளின்போது அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ₹1,000 ரொக்கமும் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2025 பொங்கலுக்கு ரொக்கம் எதுவும் வழங்கப்படாமல், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மட்டுமே அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது கடுமையான விமர்சனத்தை உருவாக்கியது.

இந்தச் சூழலில் தான், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் தாராளமான ரொக்கப் பணம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் தொகுப்பாக அதிகபட்சமாக ₹2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இந்த முறை, அதைத் தாண்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 வரை ரொக்கப் பணமாக வழங்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த கணக்கின்படி, ஒரு குடும்பத்திற்கு ₹5,000 வழங்கினால் கூட, அரசுக்கு மொத்தமாக ₹11 ஆயிரம் கோடி தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் நிதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளது மக்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டாம் கட்டப் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு நிதி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 12 ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.