மீண்டும் வேலையைக் காட்டும் டிரம்ப்!! இந்திய அரிசிக்குக் கூடுதல் வரி விதிக்கத் திட்டம்!! அமெரிக்க விவசாயிகளுக்கு ஆதரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.

அரிசி மீதான அச்சுறுத்தலுக்கான காரணம்
அமெரிக்க விவசாயிகளுக்கு 12 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பது தொடர்பான கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அமெரிக்க விவசாயிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்

குறைந்த விலை பாதிப்பு, மானிய விலையில் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அரிசி, அமெரிக்கச் சந்தைகளைப் பாதிக்கிறது. குறைந்த விலையில் அரிசி கிடைப்பதால், உள்நாட்டில் விளைந்த அரிசிக்குத் தேவை குறைவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

விவசாயிகள் வலியுறுத்தல் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் டிரம்ப் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

டிரம்ப்பின் உறுதிமொழி
விவசாயிகளின் புகார்களுக்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், “குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குச் சவால் ஏற்பட்டிருக்கிறது. இது கவனத்தில் கொள்ளப்படும். இந்திய அரிசியை அமெரிக்கச் சந்தையில் கொண்டு வந்து கொட்டுவது சரியில்லை.” என்று கூறினார்.

தற்போது இந்திய அரிசிக்கு என்ன வரி உள்ளது என்று ஆய்வு செய்து, அதற்கும் புதிய வரியை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், “இந்த விஷயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றும் டிரம்ப் விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து வருவதால், தேவைப்பட்டால் கனடா உரத்திற்கும் கடுமையான வரி விதிப்போம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய வர்த்தகச் சூழல்
ஏற்கனவே உள்ள வரி: இந்தியா – ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணமாகக் கூறி, டிரம்ப் நிர்வாகம் ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரியை (முதலில் 25% போட்டி வரி, பின்னர் கூடுதலாக 25% ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் காரணம் காட்டி) விதித்துள்ளது. இது இந்திய ஜவுளி, தோல் பொருட்கள், கடல்சார் உணவு உற்பத்தி போன்ற துறைகளைப் பாதித்துள்ளது.

அரிசி ஏற்றுமதி உலகிலேயே மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 30% ஆகும்.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2024 ஆம் ஆண்டில், இந்தியா 2.34 லட்சம் டன் அரிசியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. குறிப்பாக, பாஸ்மதி அரிசி வகைகள் இந்தியாவில் இருந்து அதிகமாக அமெரிக்கச் சந்தைக்குச் செல்கின்றன.