இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் நிலையில், ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்
முதற்கட்டமாக, வந்தே பாரத் (Vande Bharat), சதாப்தி (Shatabdi), ராஜ்தானி (Rajdhani) போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
சீருடை மற்றும் உதவி எண்
உணவு விற்பனையாளர்கள் சீருடை அணிவது கட்டாயம்.
இந்தச் சீருடைகளிலேயே, பயணிகள் புகார் அளிக்கக்கூடிய உதவி எண் (Helpline Number) அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்வது தெரிந்தால், பயணிகள் உடனடியாக அந்த எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
QR குறியீடு கொண்ட அடையாள அட்டை (ID Card):
உணவு விநியோகம் செய்பவர்களுக்கு ஒரு சிறப்புக் ஐடி கார்டு (ID Card) வழங்கப்படும்.
இந்த அட்டையில் இரண்டு QR குறியீடுகள் இடம்பெற்றிருக்கும்.
முதல் QR குறியீடு இதில், என்னென்ன உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன என்ற பட்டியலும், அவற்றின் அதிகாரப்பூர்வ விலையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இரண்டாவது QR குறியீடு இதைப் பயன்படுத்தி, பயணிகள் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்தலாம். இதன் மூலம், சில்லறைப் பணப் பரிவர்த்தனை சிக்கல்களைத் தவிர்க்கலாம், மேலும் ரொக்கமாகப் பணம் கொடுத்து உணவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த முறை தற்போதைக்கு ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களிலும், மேற்கு மற்றும் மத்திய ரயில்வேயிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இந்த நடைமுறை அனைத்து ரயில்வேயிலும் அறிமுகம் செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, அதிக விலைக்கு உணவு விற்கப்படுவதைத் தடுக்கும் என்றும், பயணிகள் தங்களுக்குப் பிடித்த உணவைச் சரியான விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பைப் பெறும் என்றும் ஐஆர்சிடிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரயில்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்..!! கடிவாளம் போட்ட IRCTC..!! புதிய விதிமுறைகள் அமல்!


