தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) என்பது மானிய விலையில் பொருட்கள் பெறுவதற்கும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் அடிப்படையான ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ், ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முக்கியச் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள்
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திரப் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தக் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். சென்னை போலவே, திருவள்ளூர், சேலம், திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்ட அலுவலகங்களிலும் (Taluk Offices) இந்தக் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமிற்குச் செல்வதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் உள்ள குறைகளை ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளலாம். இங்கு, ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, முகவரி மாற்றம், கைபேசி எண் அல்லது பதிவு மாற்றம் உள்ளிட்ட அனைத்துத் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மேலும், ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள் பெற முடியாத நபர்களுக்கான அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும். பொது விநியோகத் திட்டம் தொடர்பான வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றையும் இந்த முகாம்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்படக்கூடிய குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், KYC அப்டேட் செய்து கொள்வது கட்டாயம் என்பதால், அதையும் இந்த முகாம்களில் முடித்துக் கொள்ளலாம். இந்த முகாம்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்: இன்று நடக்கிறது!


