செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான காரணமாகும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் நிறுவனங்கள் AI வசம் ஒப்படைத்துவிட்டு மனிதர்களை நீக்கிவிட்டன.
பணிச்சூழலே மாறும்: சுந்தர் பிச்சையின் எச்சரிக்கை
இந்த மாற்றத்தை நம்மால் தடுக்கவே முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிபிசிக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். உலக அளவில் வேலைவாய்ப்புச் சந்தை பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது என்றும், எந்த ஒரு துறையும் AI-யிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய வேலைகள் முழுவதுமாக AI வசம் சென்று விடும். இனி மனிதர்கள் வேலை பார்க்கக்கூடிய முறையே அடிப்படையிலேயே பெரிய மாற்றம் காணப் போகிறது என்றும், இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்புகள் பறிபோவது ஒருபுறம் இருந்தாலும், AI புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு நிகராக இந்த உலகம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை (Reskilling) மேற்கொள்ள வேண்டும் என சுந்தர் பிச்சை அறிவுரை வழங்குகிறார். இந்த AI-ஆல் தூண்டப்பட்ட பொருளாதாரத்தில், அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்குமே முக்கியப் பங்கு உள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சென்றுவிடாமல் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்றால், AI சார்ந்த திறன்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!


