ஏப்ரல் 1, 2026 முதல் வருமான வரி மசோதா 2025-இன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தனிநபர்களின் வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வரி ஏய்ப்பு அல்லது வருமான வரி தாக்கலில் பொய் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தால், அதிகாரிகளால் தனிநபரின் அனுமதியின்றி அவர்களின் டிஜிட்டல் வாலெட்டுகள், இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய முடியும் என்று அந்தச் செய்திகள் குறிப்பிட்டன.
நேரடிச் சோதனைகளின் போது மட்டுமே டிஜிட்டல் ஆய்வு
மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு இந்தத் தகவலை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. வருமான வரித்துறை அனைவரின் டிஜிட்டல் கணக்குகளையும் தன்னிச்சையாக ஆய்வு செய்யாது. வருமான வரிச் சட்டம் 2025-இன் பிரிவு 247-இன் படி, ஒரு நபர் மீது வலுவான வரி ஏய்ப்பு புகார் இருந்து, அவரது இடத்தில் நேரடிச் சோதனை (Search and Survey) நடத்தப்படும் போது மட்டுமே அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக டிஜிட்டல் கணக்குகள் ஆய்வு செய்யப்படும். வழக்கமான வரிச் சரிபார்ப்பு (Routine Assessment) அல்லது சிறிய அளவிலான ஆய்வுகளுக்கு இந்த அதிகாரம் பயன்படுத்தப்படாது.
நேர்மையான வரி செலுத்துவோருக்குப் பாதிப்பில்லை
இந்தச் சட்டம் முக்கியமாகக் கருப்பு பணம் மற்றும் பெரிய அளவிலான வரி ஏய்ப்புகளில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களின் டிஜிட்டல் கணக்குகளைத் தன்னிச்சையாக அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஏப்ரல் 1 முதல் அனைவரது தனிப்பட்ட கணக்குகளும் கண்காணிக்கப்படும் என்ற தகவல் தவறானது. வரி ஏய்ப்பு தொடர்பாகத் தேடுதல் வேட்டை நடத்தப்படும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
வருமான வரித் துறை விளக்கம் முக்கியக் குறிப்புகள்
தவறான செய்தி: அனைவரது இமெயில் மற்றும் சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்படும் என்பது உண்மையில்லை.
நிபந்தனை கருப்பு பணம் அல்லது பெரிய வரி ஏய்ப்பு தொடர்பான நேரடிச் சோதனைகளின் போது மட்டுமே டிஜிட்டல் ஆய்வு அனுமதிக்கப்படும்.
பாதுகாப்பு நேர்மையாக வரி செலுத்தும் பொதுமக்களுக்கு இந்த விதியால் எந்தப் பாதிப்பும் இல்லை.
வருமாவரித்துறையின் புதிய அதிகாரம்: இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்படுமா?


