தாயுமானவர் திட்டம்: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தமிழக அரசின் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்வதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படும்போது, பயனாளிகளின் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி (Biometric) சரிபார்க்கப்படும். ஆனால், பல நேரங்களில் சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்சனை அல்லது வயது முதிர்வு காரணமாக முதியவர்களின் கைரேகை பதிவாவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க புதிய கையெழுத்து முறை அறிமுகம்
இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கைரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்ய இயலவில்லை என்றால், சம்பந்தப்பட்ட முதியவர் அல்லது மாற்றுத்திறனாளியிடம் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யலாம் என உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய தளர்வு மூலம், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி ரேஷன் பொருட்கள் வழங்குவது மறுக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.