இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் (Infosys), புதிய பட்டதாரிகளை ஈர்க்க அதிரடியான சம்பள உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தனது ஆஃப்-கேம்பஸ் நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்படும் திறமையான பட்டதாரிகளுக்கு பல்வேறு நிலைகளில் ஊதியத் தொகுப்புகளை வழங்குகிறது.
பல்வேறு நிலைகளுக்கான ஊதியத் தொகுப்புகள் மற்றும் தகுதிகள்
இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 நிலைக்கு ரூ.21 லட்சமும், L2 நிலைக்கு ரூ.16 லட்சமும், L1 நிலைக்கு ரூ.11 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும், டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் பணிக்கு ரூ.7 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஐடி வேலைகளுக்கு ரூ.3 – 4 லட்சம் மட்டுமே ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும் நிலையில், இந்தச் சிறப்புத் திறன் கொண்ட பணிகளுக்கான ஊதியம் ஐடி ஊழியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பு ஐஐடி போன்ற உயர்மட்டக் கல்லூரிகள் மட்டுமின்றி, சிறிய கல்லூரிகளில் பயின்றாலும் ‘AI’ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் அதிகத் திறமை கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.
வேலைவாய்ப்பு இலக்கு மற்றும் ஐடி துறையில் நிலவும் போட்டி
BE, BTech, ME, MTech, MCA அல்லது Integrated MSc பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, ECE, EEE போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனம் 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000 பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐடி துறையில் நீண்ட காலமாக பிரஷ்ஷர்களின் சம்பளம் மாறாமல் இருந்த நிலையில், இன்போசிஸின் இந்த அதிரடி முடிவு டிசிஎஸ், விப்ரோ போன்ற மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இன்போசிஸின் மெகா ஆஃபர்: ஏஐ (AI) நிபுணர்களுக்கு ரூ.21 லட்சம் வரை ஆரம்ப சம்பளம்!


