வெனிசுலாவை வீழ்த்திய அமெரிக்கா! ரிலையன்ஸ் மற்றும் ONGC-க்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அதிரடி ராணுவ நடவடிக்கையால் வெனிசுலா அரசு வீழ்த்தப்பட்டு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்தத் திடீர் புவிசார் அரசியல் மாற்றம் இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ONGC ஆகியவற்றுக்கு பெரும் லாபத்தைத் தரப்போவதாக ‘ஜெஃப்ரீஸ்’ (Jefferies) நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜாம்நகர் ஆலைக்குக் கிடைக்கும் தள்ளுபடி மற்றும் லாப வாய்ப்பு
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மிகவும் கனமானது மற்றும் அமிலத்தன்மை கொண்டது. இதனைச் சுத்திகரிக்கும் நவீன வசதி ரிலையன்ஸின் ஜாம்நகர் ஆலைக்கு உள்ளது. இதனால், சர்வதேச சந்தையை விட ஒரு பேரலுக்கு 5 முதல் 8 டாலர்கள் வரை தள்ளுபடியில் ரிலையன்ஸால் இந்த எண்ணெய்யைப் பெற முடியும். 2012-ல் ரிலையன்ஸ் செய்திருந்த எண்ணெய் ஒப்பந்தம் 2019-ல் அமெரிக்கத் தடையால் நிறுத்தப்பட்டது. இப்போது அமெரிக்கா அனுமதியளித்துள்ளதால், ரிலையன்ஸின் சுத்திகரிப்பு லாபம் (Refining Margins) பெருமளவில் உயரும். இந்தச் செய்தியின் எதிரொலியாக இன்று ரிலையன்ஸ் பங்குகள் வர்த்தகத்தின் போது உயர்வு கண்டன.

ONGC நிறுவனத்தின் நிலுவைத் தொகை மீட்பு மற்றும் விநியோகச் சங்கிலி
அதேபோல், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களில் முதலீடு செய்திருந்த ONGC நிறுவனத்திற்கு வரவேண்டிய சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடிக்கும் மேல்) டிவிடெண்ட் தொகை நீண்ட காலமாகத் தடையால் நிலுவையில் உள்ளது. மேலும் வெனிசுலாவின் ‘காரபோபோ’ (Carabobo) சொத்தில் 11% பங்குகளை ONGC வைத்துள்ளது. அமெரிக்காவின் புதிய நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ், இந்தத் தொகையை மீட்கவும், முடங்கியுள்ள பணிகளை மீண்டும் தொடங்கவும் வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி வலுப்பெறும் என்றும், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது சாதகமாக அமையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.