இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிட்ட ஒரு பாதுகாப்புச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்குத் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவு விவரங்கள்:
செயலியின் பெயர்: மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi).
இந்தியாவில் புதிதாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்தச் செயலி ப்ரீ-இன்ஸ்டால் (Pre-install) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பயனர்கள் இந்தச் செயலியைத் தங்கள் போனில் இருந்து டெலிட் செய்ய முடியாத வகையில் அது இருக்க வேண்டும்.
இந்த உத்தரவு நவம்பர் 28-ஆம் தேதியே அனைத்து ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த அவர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைக் கடைப்பிடிக்கத் தவறினால், செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள அனைத்து சாதனங்களிலும், மென்பொருள் புதுப்பித்தல் (Software Update) மூலம் இந்தச் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலியின் முக்கியப் பயன்கள்:
கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி, சைபர் குற்றங்களைத் தடுக்கவும், பயனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உதவுகிறது.
போன் கண்டுபிடிப்பு காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறிய உதவுகிறது. இதுவரை சுமார் 6 லட்சம் காணாமல் போன போன்களைக் கண்டுபிடிக்க உதவியுள்ளது.
பிளாக் செய்தல் திருடப்பட்ட சாதனத்தை அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நெட்வொர்க்குகளிலிருந்தும் பிளாக் செய்ய உதவுகிறது. இதனால் திருடப்பட்ட சாதனத்தை யாராலும் பயன்படுத்த முடியாது.
புகார் அளித்தல் குடிமக்கள் சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்பான புகார்கள், சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், தவறான நோக்கங்களுக்காக வரும் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்/வாட்ஸ்அப் மெசேஜ்கள் குறித்தும் புகார் அளிக்க முடியும்.
சிம் கார்டு சரிபார்ப்பு ஒருவரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதைச் சரிபார்க்கவும், தேவையற்ற வெளிநாட்டு அழைப்புகள் குறித்துப் புகார் அளிக்கவும் இந்தச் செயலி உதவுகிறது.
சைபர் பாதுகாப்புக்கு மத்திய அரசின் அதிரடி உத்தரவு: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம்! டெலிட் செய்ய முடியாது!


