உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது.
தரவு மையங்களின் அவசியம்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச் செயலிகள் 24 மணி நேரமும் இயங்கக்கூடியவை. இவை சரியாகச் செயல்பட தங்கு தடையின்றி எப்போதும் இயங்கும் தரவு மையங்கள்(டேட்டா சென்டர்கள்) அவசியம்.இந்த தரவு மையங்களே நவீன உலகின் இதயங்கள்.
நாம் உருவாக்கும் கோடிக்கணக்கான டேட்டாக்கள், படங்கள், வீடியோக்கள் ஆகியவை கிளவுட் அமைப்பில் சேமிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, இந்தத் தரவு மையங்களிலேயே பராமரிக்கப்படுகின்றன. சேமிப்பு மையங்கள்,மின்சாரம், குளிரூட்டிகள்,பாதுகாப்பான கட்டடங்கள், பாதுகாப்பான கணினி நெட்வொர்க்குகள் போன்றவை இவற்றுக்கு அவசியமாகின்றன.முன்னணி நிறுவனங்கள் உலக நாடுகள் அனைத்திலும் இந்த மையங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் தரவு மையங்களின் வளர்ச்சி
மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவிலும், டிஜிட்டல் தொழில்நுட்ப நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை வழங்க டேட்டா மையங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றன.
இதன் பொருட்டு அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை அமைக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளன.
எதிர்கொள்ளும் சவால்கள்:
இத்தகைய தரவு மையங்களை அமைத்து செயல்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய சவால் தண்ணீர் தேவை ஆகும்.
1. குளிரூட்டும் அமைப்பு: தரவு மையங்களில் உள்ள பெரிய அளவிலான சர்வர்கள் (Servers) சூடாவதைத் தடுக்க, அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க குளிரூட்டி அமைப்புகள் தேவைப்படுகின்றன. இந்த குளிர்விப்பான்கள் இயங்குவதற்கு அதிக அளவில் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது.
2. மனித உரிமை அமைப்பின் கேள்வி: விசாகப்பட்டினம் அதிக வெப்பநிலை கொண்ட, நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதியாகும். ஏனென்றால், ஏற்கனவே அதிக வெப்பநிலை கொண்ட, புயல் தாக்குதலுக்கு ஆளாகும், நிலத்தடி நீர் இல்லாத விசாகப்பட்டினத்தில் இந்த டேட்டா சென்டருக்கான தண்ணீரை அரசு எப்படித் தர முடியும்? இது சுற்றுப்புற மக்களுக்குத் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தாதா? அங்கு 1 ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைக்க எப்படி அனுமதி தந்தீர்கள்? என்று மனித உரிமைகள் கூட்டமைப்பு, ஆந்திர அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
3. உலகளாவிய உதாரணங்கள்:
அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் உள்ள மெட்டா (Meta) நிறுவனத்தின் மிகப்பெரிய தரவு மையத்தால், அப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்தத் தண்ணீர் பிரச்சனை எழுந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் விவசாயிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மெட்டா நிறுவனத்தின் பெரிய டேட்டா சென்டர் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், தண்ணீர் பிரச்சனையும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தான்.
இந்தியா டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ள நிலையில், அவற்றை மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை இந்தியா கண்டறிய வேண்டும்.
தரவு மையங்கள் இயங்கத் தேவையான அதிகளவு மின்சாரம், அதிக அளவு தண்ணீம் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு வழங்கும் அதேவேளையில்,மக்கள் பயன்பாட்டில் அதற்கான பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய இரட்டைச் சவால்களைச் சமாளிப்பது எப்படி என்பது இந்தியாவின் முன் உள்ள அவசர, அவசியக் கேள்வியாக உள்ளது.


