தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric Vehicles – EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 100% சாலை வரி (Road Tax) விலக்கு சலுகை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2027 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்ட 100% வரிச் சலுகை
தமிழக அரசின் புதிய அரசாணையின்படி, 2025 டிசம்பர் 31-வுடன் முடிவடைய இருந்த இந்த வரி விலக்கு சலுகை, தற்போது 2027 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 100% வரி விலக்கு இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் மற்றும் வணிக ரீதியான போக்குவரத்து வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், மின்சார வாகனக் கொள்கையின் இலக்குகளை எட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பயன்பாடு மற்றும் சேமிப்பு வாய்ப்புகள்
தமிழகத்தில் 2025-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு 7.8% ஆக அதிகரித்துள்ளது. வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று, இந்த வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் புதிய எலக்ட்ரிக் வாகனம் வாங்கத் திட்டமிடுபவர்கள் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும். அதே வேளையில், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்! சாலை வரி விலக்கை 2027 வரை நீட்டித்தது தமிழக அரசு!


