கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புத்தாண்டு பரிசாக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி பயனர்கள் தங்களுடைய தற்போதைய @gmail.com முகவரியை, அதில் உள்ள தரவுகள் (Data) எதையும் இழக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிறுவயதில் அல்லது அவசரத்தில் உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பலருக்கும் ‘ப்ரொபஷனலாக’ இருப்பதில்லை என்பதால், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காகப் புதிய முகவரிக்கு மாற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
தகவல்கள் அழியாது பழைய மெயில்களும் புதிய முகவரிக்கு தானாக வரும்!
மின்னஞ்சல் முகவரியை மாற்றினாலும், உங்கள் கணக்கில் உள்ள போட்டோக்கள், காண்டாக்ட் எண்கள், கூகுள் டிரைவ் ஃபைல்கள் மற்றும் பழைய மின்னஞ்சல்கள் என எதுவும் அழியாது என்பது இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஒருவேளை யாராவது உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பினால், அது தானாகவே உங்கள் புதிய முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும் வகையில் ‘ரீடைரக்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் தங்களது பழைய மற்றும் புதிய ஐடி என இரண்டையுமே பயன்படுத்தி கணக்கிற்குள் லாகின் செய்துகொள்ள முடியும்.
வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே மின்னஞ்சல் முகவரியை மாற்ற அனுமதி
இந்த வசதியைப் பயன்படுத்துவதில் சில முக்கியமான நிபந்தனைகளையும் கூகுள் விதித்துள்ளது. ஒரு பயனர் தனது வாழ்நாளில் மொத்தம் 3 முறை மட்டுமே மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். இந்த வசதி தற்போது படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் கூகுள் சப்போர்ட் பக்கத்தில் இந்தி பிரிவில் மட்டும் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்தச் சேவை முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிமெயில் பயனர்களுக்கு குட் நியூஸ்: டேட்டா அழியாமல் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்!


