2026-ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயருமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் 2026-ஆம் ஆண்டுக்கான தங்கத்தின் விலை குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை நிச்சயமாக உயரும் என அடித்துக் கூறும் கோடக் செக்யூரிட்டீஸ், இந்தியச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,50,000 என்ற உச்சத்தை எட்டும் எனக் கூறியுள்ளது. உலக அளவில் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான பல காரணிகள் அப்படியே நீடிப்பதால் இந்தக் கணிப்பு உறுதியாக இருக்கும் என்றும் கோடக் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாகும் சர்வதேச காரணிகள்
தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாகும் சர்வதேச காரணிகளை கோடக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அடுத்த ஆண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையானது மற்ற முதலீடுகளை விடத் தங்கம் தொடர்ந்து நல்ல லாபம் தருபவையாக நீடிப்பதற்கு வாய்ப்பளிக்கிறது. மேலும், பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையும், புவிசார் பதட்டங்களும் (Geopolitical Tensions) தங்கத்தின் விலையை உயர்த்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் விலை கணிப்பு
அமெரிக்க மத்திய வங்கியைப் பின்பற்றிப் பல நாடுகளும் வட்டி குறைப்பை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இது தவிர, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய இருப்பில் உள்ள அமெரிக்க டாலரைக் குறைத்துவிட்டு, அதற்கு மாற்றாகத் தங்கத்தை வாங்கி வைக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இதனால் டாலரின் மதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவது, தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும். 2025-ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் 50 முறை வரலாற்று உச்சபட்ச விலைகளை எட்டி இருப்பதாகவும், சர்வதேச காரணிகளே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்றும் கோடக் அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கம் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி இருக்கும் என்றும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,000 டாலர்களை எட்டும் என்றும், இந்தியச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹1.5 லட்சம் என்ற விலையை எட்டும் என்றும் கோடக் செக்யூரிட்டீஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை: 2026-ஆம் ஆண்டில் 10 கிராம் ₹1.5 லட்சம் தொடுமா? கோடக் கணிப்பு!


