உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய மக்களிடையே பண்டிகைக் காலங்களில் தங்கத்தை வாங்கும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் தங்கம் இறக்குமதி திடீரென அதிகரித்திருப்பது குறித்து பிரபல தரகு நிறுவனமான நுவாமா (Nuvama) கவலை தெரிவித்து, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை உச்சம்
ஒரு நாட்டின் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாக இருந்தால், அது வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) என்று அழைக்கப்படுகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை: அண்மையில் வெளியான தரவுகளின்படி, இந்தியாவில் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (Goods Trade Deficit) அக்டோபரில் 42 பில்லியன் டாலராக (சுமார் ₹4200 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இது செப்டம்பரில் 32 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வு ஒரு புதிய சாதனை ஆகும்.
தங்கம் இறக்குமதி மூன்று மடங்கு உயர்வு
வர்த்தகப் பற்றாக்குறை அதிரடியாக உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் தங்கம் இறக்குமதி அதிகரித்ததுதான் என்று நுவாமா தெரிவித்துள்ளது.
தங்கம் இறக்குமதி மதிப்பு: முந்தைய இதே காலக்கட்டத்தில் 4.92 பில்லியன் டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, இந்த ஆண்டு 14.77 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 199% அல்லது 3 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.
தங்கப் பற்றாக்குறை: தங்க வர்த்தகப் பற்றாக்குறை 7 பில்லியன் டாலர்கள் அதிகரித்ததன் காரணமாகவே ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையும் உச்சம் தொட்டதாக நுவாமா கூறியுள்ளது. மேலும், எண்ணெய் பற்றாக்குறையும் 2 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறதாம்.
நுவாமாவின் எச்சரிக்கை
உலகளாவிய வர்த்தகப் போக்குகள் மந்த நிலையின் ஆரம்ப அறிகுறிகளுடன் இருக்கும் சூழலில், இந்தியா தனது தங்க இறக்குமதியைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நுவாமா எச்சரித்துள்ளது.
அழுத்தம்: அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படும்போது, நாட்டின் வெளிப்புற இருப்புகளில் (External Balance) அது அழுத்தத்தை உருவாக்கும்.
பொருளாதார விளைவு: ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால், நாட்டில் இருக்கும் அதிக பணம் தங்கம் வாங்குவதற்காக வெளியே செல்கிறது என்று அர்த்தம். இதில் எந்த ஒரு வருமானமும் நாட்டிற்கு உடனடியாகக் கிடைப்பதில்லை. ஏற்கனவே அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து நகை நவரத்தினங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது என்று நுவாமா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்குப் பெரும் சிக்கல்: இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி! வர்த்தகப் பற்றாக்குறை புதிய உச்சம்!


