வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி: விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்துமா? நிதி அமைச்சகத்தின் பதில்

இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டுவருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.

சந்தை நிலவரமே விலை நிர்ணயம்: அரசின் நிலைப்பாடு

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகள் முழுக்க முழுக்க சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே நிர்ணயம் செய்யப்படுகின்றன என்றும், அவற்றின் விலை நிர்ணயம் செய்வதில் அரசாங்கத்திற்கு எந்தவிதமான தலையீடும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம், விலையை நிர்ணயம் செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அரசு தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகிறது.

இறக்குமதி வரி குறைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்

எனினும், தங்கத்தின் விலையைக் குறைத்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறை‌ந்தது என்றும் தெரிவித்தார். மேலும், மக்கள் பௌதீகத் தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்து, காகித வடிவிலான முதலீட்டுக்கு மாற ஊக்குவிக்கும் வகையில், தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond) போன்ற திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விலையேற்றத்திற்குக் காரணம் புவிசார் பதட்டங்களே

தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருப்பது புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையே ஆகும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதுபோன்ற நிச்சயமற்ற காலங்களில், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி பெரிய அளவில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் கணிசமாக தங்கத்தை வாங்கி வைத்திருப்பதுதான் இந்த வரலாற்று விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும் என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.