கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!


அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக  பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்:

1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration)

குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI  உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத் தொடாமலேயே (Hands-free) குரல் கட்டளைகள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேடலாம்.
கோ-பைலட்:  ஜெமினி AI ஒரு கோ-பைலட் போலச் செயல்பட்டு, வழிகளைக் கண்டறிந்து, தகவல்களை வழங்குகிறது.

“விலை அதிகமில்லாத, பார்க்கிங் வசதியுடன் கூடிய அருகில் உள்ள நல்ல உணவகத்தைக் கண்டுபிடித்துக் கொடு” என்று பேசினால், ஜெமினி AI ஒருங்கிணைக்கப்பட்ட கூகுள் மேப்ஸ் அதற்குரிய தகவல்களை வழங்குகிறது.

2. பரிந்துரைகள் மற்றும் இடத் தேடல்
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘இன்ஸ்பிரேஷன்’ அம்சத்தின் அடிப்படையில், உங்களின் பயணத்திற்குச் சிறந்த சுற்றுலாத் தலங்கள் மற்றும் உணவகங்கள் குறிந்த பரிந்துரைகளை வழங்குகிறது.
பயனர்களின் மதிப்பீடுகள், புகைப்படங்கள் மற்றும் பொதுத் தகவல்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கும் கூகுள் மேப்ஸால் இப்போது பதிலளிக்க முடியும்.

3. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள்

போக்குவரத்து நுண்ணறிவு: பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல், சாலை இடையூறுகள் உள்ளிட்டவற்றைக் கூகுள் மேப்ஸ் முன்பே கணித்துக் கூறும் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு எச்சரிக்கை: அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்கள் போன்ற தகவல்கள் பயனர்களுக்கு எச்சரிக்கையாக வழங்கப்படும்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்: நொய்டா, குருகிராம், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகர்களின் நெடுஞ்சாலைகளில் உள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளின் இடங்களையும் கூகுள் மேப்ஸால் கூறமுடியும்.

4. பயண வசதி மேம்பாடுகள்

மெட்ரோ டிக்கெட் முன்பதிவு: டெல்லி, பெங்களூரு, கொச்சி, சென்னை போன்ற நகரங்களில் மெட்ரோவைப் பயன்படுத்தும் பயணிகள், இனி கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த வசதி விரைவில் மும்பையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிக்கலான மேம்பாலங்கள்: சிக்கலான மேம்பாலங்களில் செல்வது தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதனையும் தொடுதல் இன்றி குரல் மூலம் பயன்படுத்தமுடியும்.
மின்சார வாகன வசதி:  மின்சார வாகனப் (Electric Vehicle – EV) பயனாளர்கள், அருகில் உள்ள சார்ஜிங் இடங்களைப் பற்றியும் குரல் வழிக் கட்டளை மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.