இனி H1B விசா நிராகரிப்புக்கு புதிய காரணங்கள்! – ‘பேச்சு சுதந்திரம்’ மீதான கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவு

அமெரிக்காவில் திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தப் பயன்படும் H-1B விசா நடைமுறைகளில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பல கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் H-1B விசா மூலம் தங்கியிருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள் என்பதால், இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடியவையாக உள்ளன.

விசா விண்ணப்பத்தில் தீவிர ஆய்வு
சமீபத்தில், அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை (State Department) ஒரு குறிப்பாணையை (Memo) அனுப்பியுள்ளது. அதில், H-1B விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவின்படி, விசா அதிகாரிகளுக்குக் கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரங்கள்:

தனிநபர் விவர ஆய்வு விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்யும் நபர்களின் ரெஸ்யூம் (Resume) மற்றும் லிங்க்டுஇன் புரொஃபைலை (LinkedIn Profile) ஆய்வு செய்ய வேண்டும்.

பின்னணி சோதனை விண்ணப்பதாரர் இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டிருந்தார், குறிப்பாகப் போலியான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பது (Fact-Checking) அல்லது உள்ளடக்கத்தை நிர்வகிப்பது (Content Moderation) போன்ற துறைகளில் வேலை செய்திருக்கிறாரா என ஆய்வு செய்ய வேண்டும்.

நிராகரிப்புக்கான புதிய காரணம்: ‘பேச்சு சுதந்திரம்’
இந்தப் புதிய விதிகளின்படி, ஒரு நபர் அமெரிக்காவில் உள்ள ‘பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான’ செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டால், அவரின் H-1B விசாவை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக:

ஒரு நபர் இந்தியாவில் சமூக ஊடக நிறுவனத்தில் பணியாற்றி, உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் எப்போதாவது அமெரிக்க அரசாங்கத்தை விமர்சிக்கும் அல்லது அமெரிக்கப் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான பதிவை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், அது அவரது விசா விண்ணப்பத்தை நிராகரிக்க ஒரு காரணமாக அமையும்.

இந்தப் புதிய விதிகள் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பிப்பவர்கள் என இரு தரப்பினருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் நிதி சேவை சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக இந்தக் கடுமையான பின்னணி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.