H-1B விசா மோசடி: ‘தொழில் ரீதியிலான முறைகேடு’ சென்னையை மையமாகக் கொண்டதா? – அமெரிக்கப் பொருளாதார நிபுணர் பகீர் குற்றச்சாட்டு!

அமெரிக்க டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தப் பயன்படுத்தும் H-1B விசா திட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பதாக, முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் டேவ் பிராட் (Dr. Dave Brat) பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளின் விவரம்


அளவை மீறிய விசாக்கள்: அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே H-1B விசா வழங்க சட்டம் உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் H-1B விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சட்ட வரம்பை மீறிய விநியோகம்: அரசின் வரம்பைவிட இது 2.5 மடங்கு அதிகம் என்றும், இது ஒரு மிகப்பெரிய குளறுபடி என்றும் டேவ் பிராட் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தொழில் ரீதியிலான மோசடி‘: H-1B விசா பெறுவதில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மோசடி நிகழ்கிறது என்றும், இதனை சிலர் ஒரு தொழிலாகவே (Industrial-scale fraud) செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விளைவு: இவ்வாறு மோசடியாக விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் தான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும், எதிர்காலத்தையும் பறிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் தரவுகள்


தரவுகளின்படி செயலாக்கம்: 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு வெளியிட்ட தரவுகளின்படி, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 2,20,000 H-1B விசாக்களையும், கூடுதலாக 1,40,000 H-4 (சார்பு) விசாக்களையும் செயலாக்கம் செய்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விசா மையமாகச் சென்னை தூதரகம் செயல்படுகிறது.

முன்னாள் ஊழியரின் குற்றச்சாட்டு
போலி விண்ணப்பங்கள்: அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த இந்திய அமெரிக்கரான மஹ்வாஷ் சித்திக்கி என்பவரும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் 2005 முதல் 2007 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 51,000-க்கும் மேற்பட்ட போலியான விசா விண்ணப்பங்களை நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.

போலி ஆவணங்கள்: இந்தியாவில் இருந்து வரும் சுமார் 80 சதவீத H-1B விசா விண்ணப்பங்கள் போலியானவை என்றும், போலி பட்டங்கள் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் மோசடி: சில விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கூட நேரடியாகக் கலந்துகொள்ளாமல் மோசடி செய்திருக்கிறார்கள் என்றும், இந்தியாவில் மோசடியும், லஞ்சமும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோசடி நெட்வொர்க்: ஹைதராபாத்தில் இதுபோன்ற மோசடியாக H-1B விசாக்களைப் பெற்றுத் தரவே தனியாக நெட்வொர்க்குகள் இயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.