இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், 2025 டிசம்பர் காலாண்டு (Q3 FY26) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக டிசிஎஸ் நிறுவனம் லாபச் சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது ஹெச்சிஎல் நிறுவனமும் அதே பாதையில் பயணிப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் வளர்ச்சி மற்றும் லாப நிலவரம்
ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.4,591 கோடியாக இருந்தது. தற்போது அது 11 சதவீதம் சரிந்து ரூ.4,076 கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 13 சதவீதம் உயர்ந்து ரூ.33,872 கோடியாக உள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) சேவைப் பிரிவின் மூலம் நிறுவனம் 146 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது; இது முந்தைய காலாண்டை விட 19.9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.12 டிவிடெண்ட்!
லாபச் சரிவு ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஹெச்சிஎல் நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.12 இடைக்கால டிவிடெண்ட் (Interim Dividend) அறிவித்துள்ளது. இந்த டிவிடெண்ட் தொகையைப் பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியாக ஜனவரி 16, 2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள முதலீட்டாளர்களுக்கு ஜனவரி 27-ஆம் தேதிக்குள் இந்தத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் செலவினக் குறைப்பு போன்ற காரணங்களால் முன்னணி ஐடி நிறுவனங்கள் லாபச் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனினும், ஏஐ (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஹெச்சிஎல் காட்டி வரும் ஆர்வம் எதிர்காலத்தில் வருவாய் அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல் (HCL Tech) மூன்றாம் காலாண்டு முடிவுகள்: லாபத்தில் 11% சரிவு – டிவிடெண்ட் அறிவிப்பு!


