அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்தார். இந்தியப் பொருட்களுக்கான 25% வரி விதிப்புடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்கு தண்டனையாக மேலும் 25% என மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டதால், ஏற்றுமதித் துறை நிறுவனங்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜவுளி மற்றும் தோல் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து, பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
ஏற்றுமதி வளர்ச்சி: வர்த்தகப் பற்றாக்குறை பாதியாகக் குறைப்பு
எனினும், டிரம்ப் விதித்த இந்த கடுமையான வரிவிதிப்பால் ஏற்பட்ட பாதிப்பை இந்திய அரசு இரண்டே மாதங்களில் முறியடித்திருப்பது தற்போது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மாற்று சந்தைகளை அணுகும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மூலோபாய மாற்றங்கள் இதற்கு உதவியுள்ளன. இதன் விளைவாக, அக்டோபரில் 41.68 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து 24.53 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
வரி குறைப்பு நடவடிக்கையின் வெற்றி
மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 19.37% அதிகரித்து 38.13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும், அதே சமயம் இறக்குமதி 1.88% குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகப்படியான வரிவிதிப்பு இருந்தபோதிலும், இந்தியப் பொருட்களுக்கான தேவை அமெரிக்காவில் தொடர்ந்து நீடிப்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வலுவாக இருப்பதும் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசின் வரி குறைப்பு நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி ஊக்கத் திட்டங்கள், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவியுள்ளன.
டிரம்பின் 50% இறக்குமதி வரியை இரண்டு மாதங்களில் முறியடித்த இந்தியாவின் வியூகம்


