இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) திட்டத்தின் கீழ் மொத்தம் ₹76,000 கோடி மதிப்புள்ள நிதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக ₹65,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ₹62,900 கோடி வரை நிதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால், மொத்த நிதியில் 97% பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய திட்டங்களுக்கு மிகக் குறைவான இடமே மீதமுள்ளது.
இந்த விவரத்தை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்னன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டதால், மீதமுள்ள தொகையில் இரண்டு அல்லது மூன்று சிறிய அளவிலான திட்டங்களுக்கு மட்டுமே இடமிருக்கும்” என்றார். இதனால் பெரும் அளவிலான புதிய செமிகண்டக்டர் உற்பத்தி முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்பு வரும் காலத்தில் குறைந்துவிட்டது எனலாம்.
இந்த அறிவிப்பு Semicon India 2025 என்ற சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 33 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மற்றும் உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களின் 50-க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இது இந்தியாவின் செமிகண்டக்டர் துறையை சர்வதேச அளவில் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது கருதப்படுகிறது.
மிகுந்த நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டதால், புதிய பெரிய திட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்திருந்தாலும், கடந்த மாதங்களில் 4 புதிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு சுமார் ₹4,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் “மேக் இன் இந்தியா” முயற்சியில் முன்னேற்றம் காணப்படுகிறது. எதிர்காலத்தில் சிறிய அளவிலான திட்டங்கள் மற்றும் கூட்டுறவு முயற்சிகள் மூலமாக நாட்டின் செமிகண்டக்டர் துறை நீண்டகால வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
செமிகண்டக்டர் மிஷன் – மீண்டும் மத்திய அரசு ₹4,600 கோடி நிதி!


