இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பேரிடி: 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளைக் கடுமையாகத் தண்டிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு 500% வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பொருளாதார ரீதியாக ரஷ்யாவைத் தனிமைப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை பெருமளவு உயரும். புதினின் போர் இயந்திரத்திற்கு இந்த நாடுகள் நிதி வழங்கி உதவி செய்கின்றன என்பதே அமெரிக்காவின் வாதமாக உள்ளது. ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 500% உயர்வு இந்திய வணிகர்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை ஏற்படுத்தும்.

பாதிக்கப்படும் இந்தியத் துறைகள் மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் இந்தியாவின் ஜவுளி, தோல் உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன. ஏற்கனவே வரிச் சுமையால் தவித்து வரும் இந்தத் தொழில்களுக்கு 500% வரி என்பது பேரிடியாக அமையும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்கு மாற்றாக ஐரோப்பா அல்லது ஆசிய நாடுகளின் சந்தைகளைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தங்களைச் சீர்செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல் போக்கு பேச்சுவார்த்தையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்தியாவை அச்சுறுத்துகிறதா என்ற விவாதம் பொருளாதார நிபுணர்களிடையே எழுந்துள்ளது. வரும் வாரங்களில் இந்த மசோதா மீதான விவாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.