இந்திய பொருளாதாரம், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY26, ஏப்ரல்–ஜூன்) மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 6.5% கணிப்பை மீறி 6.8% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI-யின் nowcast மாதிரி படி, சராசரி வளர்ச்சி 6.9% என்றும், GVA (Gross Value Added) வளர்ச்சி 6.5% என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக வணிகச் செலவு அதிகரிப்பு மற்றும் தேவை சார்ந்த வளர்ச்சி அமைந்துள்ளன. அறிக்கையின் படி வளர்ச்சி மற்றும் GDP இடையேயான இடைவெளி குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், முழு நிதியாண்டிற்கு இந்திய பொருளாதாரம் சுமார் 6.3% வளர்ச்சி மட்டுமே பெறும் வாய்ப்பு இருப்பதாக SBI எச்சரிக்கிறது. இது RBI இலக்காக வைத்துள்ள 6.5% வளர்ச்சியை விட குறைவு. குறிப்பாக, தனியார் முதலீடுகள் (Private Capex) குறைவு, பொருளாதாரத்தின் நீடித்த ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் என SBI குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசின் மூலதனச் செலவீடு (Public Capital Expenditure) வளர்ச்சியைத் தூண்டும் நிலையான காரணியாக இருந்து வருகிறது. மொத்தத்தில், Q1 வளர்ச்சி வலுவாக இருந்தாலும், தனியார் முதலீட்டின் பலவீனம் மற்றும் உலகளாவிய பொருளாதார அச்சங்கள் முழு நிதியாண்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என SBI அறிக்கை எச்சரிக்கிறது.