பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியக் காப்பீட்டுத் துறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் மூலம், காப்பீட்டுச் சந்தையில் பெரிய அளவில் வெளிநாட்டு மூலதனம் வர வாய்ப்புள்ளதுடன், இத்துறையை வலுப்படுத்தப் பல சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
100% FDI என்றால் என்ன?
தற்போதுள்ள விதிகளின்படி, காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இப்போது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முழு உரிமையுடன் காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கவோ அல்லது ஏற்கெனவே உள்ள நிறுவனங்களை முழுமையாக வாங்கவோ முடியும். இதன் மூலம் பல நூறு பில்லியன் டாலர் முதலீடு புதிதாக வர வாய்ப்புள்ளது.
சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
சாதாரண மக்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் முக்கியப் பலன்கள்
குறைந்த பிரீமியம்: புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் வருவது போட்டியை அதிகரிக்கும். இதனால் காப்பீட்டுக் கட்டணங்கள் (பிரீமியம்) குறைய வாய்ப்புள்ளது.
சிறந்த சேவைகள் காப்பீட்டு நிறுவனங்கள் உலகளவில் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம், அதிக மூலதனம், சிறந்த சேவைத் தரம் மற்றும் விரைவான க்ளெய்ம் செட்டில்மென்ட் ஆகியவை இந்தியாவிற்கு வரும்.
காப்பீட்டுத் துறையில் 100% FDI அனுமதி இந்தியாவுக்குப் பல வழிகளில் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் வெளிநாட்டு மூலதனம் இந்தியாவுக்குள் வந்து காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனத்தை வலுப்படுத்தும். இது பெரிய அளவிலான க்ளெய்ம்களைச் சமாளிக்க உதவும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், தொழில்நுட்பம், AI மற்றும் டிஜிட்டல் சேவைகள் இத்துறையில் வேகமாகப் புகுத்தப்படும். இந்தக் காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா, நடந்து கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு (FDI) அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


