தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார்-OTP முறையால் சாமானிய மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவில், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்குத் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இந்த முறைகேடுகளைக் குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் மற்றும் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தது. மேலும், ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) உள்ளீடு செய்தால்தான் டிக்கெட் முன்பதிவு ஆகும் என்ற புதிய நடைமுறையையும் அமலுக்குக் கொண்டு வந்தது.

முறைகேடுகள் குறைந்தது: 3 கோடி போலி கணக்குகள் நீக்கம்
இந்த ஆதார் அடிப்படையிலான ஓடிபி முறை நடைமுறைக்கு வந்த பிறகு, டிக்கெட் முன்பதிவில் நடைபெற்ற முறைகேடுகள் பெருமளவில் குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 3 கோடி ஐஆர்சிடிசி கணக்குகளை ரயில்வே நிர்வாகம் முடக்கி இருக்கிறது. இது குறித்து மக்களவையில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர், தற்போது தட்கல் டிக்கெட் கிடைப்பது பயணிகளுக்கு மிகவும் எளிமையானதாக மாறி இருப்பதாகக் கூறியுள்ளார்.

தட்கல் டிக்கெட் கிடைப்பதில் 65% அதிகரிப்பு
டிசம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஆன்லைன் தட்கல் முன்பதிவில் ஆதார்-OTP முறை 322 ரயில்களில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இதன் விளைவாக, இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 65 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, டிக்கெட் முன்பதிவு மையங்களில் உள்ள தட்கல் முன்பதிவுக்கும் ஆதார்-OTP முறை 216 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில முக்கியமான 96 ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 95 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால், ரயில்வே டிக்கெட் முன்பதிவு முன்பை விட வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் மாறி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.