இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையில் (ITR) முரண்பாடுகள் இருப்பதால், ரீபண்ட் (Refund) தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தற்போது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ மற்றும் மேம்பட்ட டேட்டா அனலிசிஸ் முறையைப் பயன்படுத்தி வருவதால், ஐடிஆர் தகவல்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள படிவம் 16 அல்லது ஆண்டு தகவல் அறிக்கை (AIS) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள சிறிய வேறுபாடுகளும் கண்டறியப்படுகின்றன.
தவறான வரி விலக்கு கோரிக்கைகளும்,ரீபண்ட் தாமதத்திற்கான காரணங்களும்
வீட்டு வாடகை (HRA), மருத்துவக் காப்பீடு அல்லது நன்கொடைகள் தொடர்பாகத் தவறான வரி விலக்கு கோரிக்கைகளை முன்வைப்பது மற்றும் வெளிநாட்டு வருமானத்தை மறைப்பது போன்ற காரணங்களால் ரீபண்ட் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு சரிபார்க்கப்படாமல் (Pre-validated) இருப்பது அல்லது தவறான கணக்கு விவரங்களை அளிப்பது போன்ற தொழில்நுட்ப சிக்கல்களும் இதற்கு முக்கியக் காரணமாகும். இந்த முரண்பாடுகளைச் சரிசெய்ய வருமான வரித்துறை டிசம்பர் 31, 2025 வரை காலக்கெடு விதித்துள்ளது.
திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான இறுதி வாய்ப்பு
வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் அறிக்கையை மீண்டும் ஒருமுறை AIS மற்றும் Form 26AS ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட ஐடிஆர் (Revised ITR) தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தேதிக்குப் பிறகு திருத்தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வது கடினம் என்பதோடு, அபராதம் மற்றும் வட்டியுடன் தாமதத்தை மன்னிப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, ரீபண்ட் தொகையை விரைவாகப் பெற இந்த நடைமுறைகளை டிசம்பர் 31-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வருமான வரி ரீபண்ட் நிறுத்தம்: டிசம்பர் 31-க்குள் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய எச்சரிக்கை!


