உலகின் முன்னணி வங்கியான ஜேபி மார்கன் சேஸ் (JPMorgan Chase & Co.), இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கிளையைத் திறக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளதால், அமெரிக்க வங்கி தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்தப் புதிய கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) புதிய அலுவலகம் அமைப்பதற்கு முதல் கட்ட அனுமதியை (In-Principle Approval) அளித்ததைத் தொடர்ந்து, ஜேபி மார்கன் தனது நான்காவது கிளையை புனேவில் 2025-ஆம் ஆண்டில் அமைக்க உள்ளது.
புதிய கிளையின் நோக்கம் மற்றும் சேவைகள்
புனேயில் அமைய உள்ள இந்தப் புதிய கிளை, மும்பையைச் சுற்றியுள்ள கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்கும் மையமாகச் செயல்படும். இந்தக் கிளை குறிப்பாகக் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. இதில் பரிவர்த்தனை வங்கிச் சேவைகள் (Transaction Banking), குறுகிய கால கடன் (Term Lending) மற்றும் கருவூல சேவைகள் (Treasury Services) உள்ளிட்ட பல சேவைகள் அளிக்கப்படும்.
இந்தியாவின் வேகமான வளர்ச்சி, வலுவான கடன் தேவை மற்றும் கார்ப்பரேட் செயல்பாடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களாலேயே வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துகின்றன. ஜேபி மார்கன் நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் சொத்து மேலாண்மை, முதலீட்டு வங்கி மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. 2016-ஆம் ஆண்டில் மூன்று கிளைகளைத் தொடங்க RBI அனுமதி அளித்த பிறகு, சுமார் ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பின் ஜேபி மார்கன் தனது கிளை விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேபி மார்கன்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிய கிளை


