ஃபாஸ்டேக்: ‘கே.ஒய்.வி’ (KYV) நடைமுறை எளிமை! இனி கார், ஜீப் ஓட்டுநர்களுக்கு இந்த போட்டோ போதும்!


தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம், ஃபாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கான வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV – Know Your Vehicle) என்ற நடைமுறையை எளிமையாக்கியுள்ளது. இது ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

KYV என்றால் என்ன?

நாம் வங்கியில் கணக்கு தொடங்கும்போது கே.ஒய்.சி (KYC – Know Your Customer) என்பது கட்டாயம். அதேபோல, ஃபாஸ்டேக் சரியான மற்றும் பொருத்தமான வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கும் ஒரு ஒழுங்குமுறை தான் கே.ஒய்.வி (KYV). அனைத்து ஃபாஸ்டேக் பயனர்களும் தங்கள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு இந்தச் சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்.

KYV ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது?

சில லாரி ஓட்டுநர்கள், கார்களுக்கு வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்திச் சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணம் செலுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டைத் தடுக்கவே KYV நடைமுறை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

எளிமையாக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள்:

தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (NHAI) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, KYV நடைமுறை பின்வருமாறு எளிமையாக்கப்பட்டுள்ளது:

1.  புகைப்படம்: கார், வேன், ஜீப் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு, இனி வாகனத்தின் பக்கவாட்டுப் படங்களைப் (Side Photos) பதிவேற்றத் தேவையில்லை.


2.  தேவைப்படும் புகைப்படங்கள்: அதற்குப் பதிலாக, வாகனத்தின் முகப்புப் பகுதிப் புகைப்படம் மற்றும் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும் பக்கத்தின் புகைப்படம் மட்டுமே போதுமானது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


3.  ஆவண விவரங்கள்: பயனர் தனது வாகன எண், சேசிஸ் எண் அல்லது மொபைல் எண்ணை ‘வாஹன்’ (VAHAN) தளத்தில் உள்ளீடு செய்யும் போது, அந்த வாகனத்திற்கான ஆர் சி (RC) விவரங்கள் தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

KYV முடிக்கப்படாவிட்டால் என்ன ஆகும்?

இந்த KYV நடைமுறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


KYV சரிபார்ப்பை முடித்த பிறகு, ஃபாஸ்டேக் கணக்கு இணைக்கப்பட்ட வங்கி அதைச் சரிபார்த்து அனுமதி அளிக்கும்.
ஒருவேளை வங்கி அதை ஏற்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஃபாஸ்டேக் கணக்கு ‘ஹாட் லிஸ்டில்’ சேர்க்கப்பட்டு, அந்த கணக்கு நீக்கப்படலாம்.

KYV முடிக்காத கணக்குகளைப் பயன்படுத்தும் போது, பயனர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

கால அவகாசம்: இந்த KYV நடைமுறையை முடிக்கப் போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும், பாலிசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் வழங்கப்பட்ட ஃபாஸ்டேக் வைத்திருப்பவர்கள் விரைவில் KYV-ஐ முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட வங்கிகள் எஸ்எம்எஸ் (SMS) மூலம் இது குறித்து நினைவூட்டும் என்றும் அரசு கூறியுள்ளது.