இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான எல்டிஐ மைண்ட் ட்ரீ (LTI Mindtree), செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1,500 டிஜிட்டல் ஊழியர்களை உருவாக்கி, தனது செயல்பாடுகளில் களமிறக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, ஏற்கனவே பணிநீக்க அச்சத்தில் உள்ள ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பணி அமர்த்தப்பட்டுள்ள பிரிவுகள் வாடிக்கையாளர் சேவை (Customer Service), நிதித்துறை (Finance), மற்றும் உள்கட்டமைப்புச் செயல்பாடு (Infrastructure Operations) ஆகிய பிரிவுகளில் இந்த 1,500 ஏஐ ஏஜெண்டுகள் (‘டிஜிட்டல் ஊழியர்கள்’) புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஏஐ ஏஜெண்டுகளுக்கு வழக்கமான ஊழியர்களைப் போலவே ‘எம்பிளாயி ஐடி’ (Employee ID) மற்றும் ‘டிஜிட்டல் புரோஃபைல்’ ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) வேணு லம்பு அளித்த பேட்டியில், இவை ஏஐ ஏஜெண்டுகள் அல்ல, மாறாக ‘எங்களின் டிஜிட்டல் ஊழியர்கள்’ என்று கூறியுள்ளார்.
மனிதர்களின் பங்கு
வழிகாட்டிகள்: இந்த டிஜிட்டல் ஊழியர்களுக்கு மனிதர்கள் வழிகாட்டிகளாக (Managers) இருப்பார்கள். ஏஐ ஏஜெண்டுகளுக்குப் பயிற்சி அளிப்பது, அவை செய்யும் வேலைகளை மேற்பார்வை இடுவது உள்ளிட்ட பணிகளை மனித ஊழியர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
ஒருவேளை இந்த ஏஐ ஏஜெண்டுகள் சரியாக வேலை செய்யவில்லை அல்லது சொல்லிக் கொடுப்பதைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், மனிதர்களைப் போலவே அந்த டிஜிட்டல் ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் வேணு லம்பு தெரிவித்துள்ளார்.
வருவாய் இலக்கு
இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமலேயே 2026-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனம் கூடுதலாக 64 மில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த LTI Mindtree திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும் தலைமைச் செயல் அதிகாரி வேணு லம்பு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தற்போது, புதிய கிளைண்டுகளைக் கொண்டு வருவது, அவர்களுக்கான ப்ராஜெக்ட் செயலாக்கம் செய்வது, கணக்கு பார்ப்பது உள்ளிட்ட பல பணிகளை ஏஐ ஏஜெண்டுகள் கவனித்துக் கொள்வதாகவும், மனித ஊழியர்கள் அவற்றை மேற்பார்வை இடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய LTI Mindtree: 1,500 ‘டிஜிட்டல் ஊழியர்களை’ பணிக்கு அமர்த்தியது!


