இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களில் வெறும் 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் முதலீட்டைத் தொடர்கின்றனர். பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயம் மற்றும் போதிய அவசர கால நிதி இல்லாததால் வீட்டு விசேஷங்களுக்காக முதலீட்டை இடையில் நிறுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பும் வெளியேற்றமும்
முதலீட்டாளர்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டால் குறுகிய காலத்திலேயே அது இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் சந்தையில் மெதுவான வளர்ச்சி இருக்கும்போது, லாபம் குறைவாக இருப்பதாகக் கருதி ஏமாற்றமடைந்து வெளியேறுகின்றனர். இந்தச் சூழலில், ‘கம்ப்ளீட் சர்க்கிள்’ நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி (CIO) குர்மீத் சாதா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நீண்ட கால மூலதன ஆதாய வரியை (LTCG Tax) மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும் வரிச் சலுகை அவசியமும்
பொறுமையாக நீண்ட காலம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அரசு உரிய வரிச் சலுகைகளை வெகுமதியாக அளிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான நிலையான முதலீடு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட லாபத்திற்கு 12.5% LTCG வரி விதிக்கப்படுவது நீண்ட கால முதலீட்டாளர்களைக் குழப்பமடையச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சாதாவும் சுட்டிக்காட்டியுள்ளார். முதலீடுகள் மீது அதிக வரி விதிப்பது செல்வம் உருவாவதைத் தடுக்கும் செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்: 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளைக் கடக்கின்றனர்!


