Vetri Magalir Thozhilmunaivor Membattu Thittam Guidelines How to Apply: கடன் பெறுவதற்கான தகுதியாக, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் சிபில் தரவரிசை 7 அல்லது அதற்குக் குறைவாகவும், தனிநபர் சிபில் ஸ்கோர் 600-க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டையும், அவர்கள் மத்தியில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதையும் ஊக்குவிக்கும் வகையில், "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு 10 மகளிர் தொழில்முனைவோர்கள் வீதம் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தேர்வு செய்யும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் அடிமட்ட அளவில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் தொழில் வாய்ப்புகளைப் பெறவுள்ளனர்.
"வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" முக்கிய நோக்கம் என்ன?: உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்தவோ, நவீனமயமாக்கவோ அல்லது பல்வகைப்படுத்தவோ இந்தச் சிறப்பு நிதியுதவித் திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியைக் கொண்டு, தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் வாங்குதல், கட்டடம் கட்டுதல் மற்றும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எத்தகைய நிறுவன அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறத் தகுதியுடையவை? இத்திட்டத்தில் பயன்பெற, தொழில் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 51 சதவீதப் பங்குரிமையை மகளிர் தொழில்முனைவோர் கொண்டிருக்க வேண்டும். தனிநபர் நிறுவனங்கள் (Proprietary/One Person Company), கூட்டாண்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership/LLP Firms) மற்றும் தனியார் / பொதுத்துறை நிறுவனங்கள் (Private/Public Ltd. Company) ஆகியவை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியானவை. மேலும், இத்திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில்முனைவோராகக் களமிறங்கும் பெண்களுக்கு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மூலம் சிறப்புத் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.