இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks – PSB) ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரசின் புதிய திட்டம் என்ன?
ஆலோசனை: நவம்பர் 6 அன்று மும்பையில் நடந்த எஸ்.பி.ஐ யின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய பேசிய நிதியமைச்சர், “வங்கிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன.ஒருங்கிணைப்பதன் மூலம் உலகத்தரமான பெரிய வங்கிகளை உருவாக்குவது குறித்து ரிசர்வ் வங்கியோடு ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று உறுதிப்படுத்தினார்.
ஒருங்கிணைப்பின் நோக்கம்: நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சிறிய வங்கிகளுக்குப் பதிலாக, குறைவான எண்ணிக்கையிலான, ஆனால் நிதி ரீதியாக வலிமையான வங்கிகளை உருவாக்குவதே இந்த ஒருங்கிணைப்பின் முக்கிய நோக்கமாகும்.
பொருளாதார வளர்ச்சி: இப்படி வலிமையான வங்கிகள் உருவானால், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மிகப் பெரிய கடன்களை எளிதில் வழங்க முடியும் என்றும், நிதித்துறையில் கொண்டு வரப்படும் புதிய சீர்திருத்தங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசு நம்புகிறது.
எந்தெந்த வங்கிகள் இணைக்கப்பட வாய்ப்புள்ளது?
சந்தை வட்டாரத் தகவல்களின்படி, அடுத்தகட்ட இணைப்பில் பின்வரும் வங்கிகள் நாட்டின் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), பேங்க் ஆஃப் இந்தியா (BOI) மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BOM). போன்ற வங்கிகள் கீழ்வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI).வங்கிகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைக்கப்படக் கூடும்
தற்போது பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், அரசின் பங்குகளைக் குறைத்து, பொதுப் பங்குகளின் அளவைச் சரியாக வைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த இணைப்பு குறித்து அரசு இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வங்கிகளுக்கு அனுப்பவில்லை.நிதியமைச்சரின் இந்தப் பேச்சு, இந்தியாவின் வங்கித் துறையின் எதிர்காலப் பயணம் உலகத் தரம் நோக்கிச் செல்லும் என்பதைக் காட்டும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


