பொங்கல் பரிசு ரூ.3,000: எந்த ரேஷன் கார்டுக்கு பணம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது?

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அதிரடியாக ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஆனால், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பரிசுத் தொகை பெறத் தகுதியான குடும்ப அட்டைகள்
அரசு அறிவிப்பின்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த ரூ.3,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குறிப்பாக PHH (முன்னுரிமை குடும்ப அட்டை), PHH-AAY (அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை), NPHH (முன்னுரிமை அற்ற அரிசி குடும்ப அட்டை) மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு விலக்கு மற்றும் விநியோக முறை
அதே சமயம், NPHH-S (சர்க்கரை அட்டை) மற்றும் NPHH-NC (பொருட்கள் இல்லா அட்டை) வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட மாட்டாது. சுருக்கமாகச் சொன்னால், ரேஷன் கார்டைப் பயன்படுத்தி அரிசி வாங்கக்கூடிய குடும்பங்களுக்கு மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும். புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து, இன்னும் கார்டு கைக்கு வராதவர்களுக்கும் இந்த ஆண்டு பரிசுத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வந்து டோக்கன் வழங்குவார்கள். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மக்கள் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.