ரகுராம் ராஜனின் அதிரடி எச்சரிக்கை! அடுத்த உலக நிதி நெருக்கடிக்குத் தொடக்கப் புள்ளி இதுதான்: தனியார் கடன் சந்தை ஆபத்து!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், உலக அளவில் வளர்ந்து வரும் தனியார் கடன் சந்தையில் (Private Credit Market) ஆபத்து அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதும், வட்டி விகிதம் குறைவது குறித்த எதிர்பார்ப்புகளும் அடுத்த நிதி நெருக்கடிக்கு வித்திடலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் கடன் சந்தை என்றால் என்ன?
தனியார் கடன் என்பது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs), முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் போன்றவை, நேரடியாகத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதைக் குறிக்கிறது. 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு வங்கிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இந்தத் தனியார் கடன் சந்தை வேகமாக வளர்ந்தது. இந்தப் பிரிவில் கொடுக்கப்படும் கடன்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆகாது என்பதால், இவை ஆபத்து குறைந்தவையாகத் தோன்றினாலும், ஒரு நிறுவனம் தோல்வியடைந்தால், அது சங்கிலித் தொடராகப் பல நிறுவனங்களைப் பாதிக்கும் ஆபத்து இதில் உள்ளது.

அதிகப் பணப்புழக்கமும் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பும்
ரகுராம் ராஜன் தனியார் கடன் சந்தையில் நிலவும் இரண்டு முக்கிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவதாக, தற்போது தனியார் கடன் சந்தையில் பணம் (Liquidity) அதிகமாக இருக்கிறது. இதற்கு, செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான முதலீடுகள் மற்றும் வெற்றிகள் காரணமாக ‘இன்னும் கடன் கொடுத்தால் லாபம் வரும்’ என்ற நம்பிக்கை அதிகரித்ததே காரணம். “பணம் நிறைய இருக்கும்போதுதான் ஆபத்து அதிகமாகும். முதலீட்டாளர்கள் இப்போது மிகக் கவனமாக இருக்க வேண்டிய நேரம்” என்று அவர் வலியுறுத்தினார். இரண்டாவதாக, அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அதிக பணம் எளிதாகக் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஆபத்துகளை மறந்து அதிக கடன் கொடுக்கின்றன என்றும் அவர் எச்சரித்தார்.

மத்திய வங்கி ஆதரவு மற்றும் கண்காணிப்பு


இந்தச் சந்தை அடுத்த நிதி நெருக்கடிக்கு அபாயம் ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணத்தை ரகுராம் ராஜன் விளக்கினார். தனியார் கடன் நிறுவனங்கள் வங்கிகளைப் போலக் கடுமையான கண்காணிப்பு விதிகள் மற்றும் அழுத்தம் சோதனைகளுக்கு (Stress Tests) கீழ் இல்லை. அவை ஆபத்துக் காரணிகளைக் கணக்கில் எடுக்காமல், தமது விருப்பத்தின் அடிப்படையில் கடன் வழங்குகின்றன. மேலும், “வங்கிகளுக்கு மத்திய வங்கியின் (Central Bank) உதவி இருக்கும். ஆனால், தனியார் கடன் நிறுவனங்களுக்கு மத்திய வங்கிகளின் உதவி நேரடியாக இல்லை. நெருக்கடி வந்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்,” என்று அவர் எச்சரித்தார். இந்தப் பேச்சுகள் தனியார் கடன் சந்தையில் மறைமுகமாக ஆபத்து இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன.