கடன் வாங்கியோருக்கு நிவாரணம்: RBI நடவடிக்கையைத் தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைத்த வங்கிகள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் நடத்திய டிசம்பர் மாத நிதி கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இதனால், 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் டிசம்பர் 5-ஆம் தேதியிலிருந்து 5.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தைக் கொண்டுதான் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் மொத்த வட்டி குறைப்பு மட்டும் 1.25 சதவீதமாக உள்ளது.

வட்டிக் குறைப்பை அறிவித்த முன்னணி வங்கிகள்
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதங்களைக் குறைத்து அறிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி தனது MCLR (Marginal Cost of Funds based Lending Rate) விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால், 8.35% முதல் 8.60% வரை இருந்த MCLR விகிதம் தற்போது 8.30% முதல் 8.55% ஆகக் குறைந்திருக்கிறது. MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களை வாங்கியவர்கள், தங்கள் அடுத்த ரீசெட் தேதியில் வட்டி குறைப்பைக் கவனிக்க வேண்டும்.

கடன் வாங்கியவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களை 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது டிசம்பர் 6-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு தானாகவே நடைமுறைக்கு வரும். பேங்க் ஆஃப் பரோடா (BoB) தனது பெஞ்ச்மார்க் சில்லறை கடன் விகிதங்களை 8.15 சதவீதத்திலிருந்து 7.90 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. இது வீட்டுக் கடன் உட்பட பல கடன்களின் மாதாந்திர இஎம்ஐ தொகையைக் குறைக்கும். இந்தியன் வங்கி ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் விகிதத்தை 7.95 சதவீதமாகவும், பேங்க் ஆஃப் இந்தியா 8.10 சதவீதமாகவும் குறைத்துள்ளன. மேலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வீட்டுக் கடன் வட்டியை 7.35 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் மாதாந்திர இஎம்ஐ தொகையைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதே இஎம்ஐ தொகையைத் தொடர்ந்து செலுத்தி, கடன் செலுத்தும் காலத்தைக் குறைத்துக் கொள்ளலாம். மிதக்கும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் தங்கள் அடுத்த ரீசெட் தேதியில் இந்த வட்டி குறைப்பு அமலாகிறதா என்பதைத் தங்கள் வங்கி மேலாளரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.